முதலில் – சூர்யவன்ஷியின் இந்த மகத்தான எழுச்சிக்கு அவரது மனநிலைதான் முக்கியக் காரணம். என்னதான் 14 வயதிலேயே மிகப் பெரிய தொடரில் கால் பதித்துவிட்டாலும், உலகின் கண்கள் மொத்தமும் தன் மீது இருந்தாலும், அவரிடம் எந்த சலனமும் இல்லை.
அவர் உண்மையிலேயே யார் பந்துவீசுகிறார் என்பதைப் பற்றியெல்லாம் யோசிப்பதே இல்லை. அர்ஜுனன் கண்ணுக்குக் கிளியின் கண்கள் மட்டுமே தெரிந்ததுபோல், இவருக்குப் பந்து மட்டுமே தெரிகிறது. அதனால் தான் ஜஸ்ப்ரித் பும்ரா, ஷார்துல் தாக்கூர், டிரென்ட் போல்ட், ஜாஷ் ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ் என யார் பந்து போட்டாலும் முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்கவிடுகிறார்.
தன்னுடைய வேலை அடிப்பது மட்டும்தான் என்பது பசுமரத்து ஆணியைப் போல் அந்த பாலகனின் மனதில் அழுத்தமாக இறங்கிவிட்டிருக்கிறது. சொல்லப்போனால், எல்லோரும் ஆச்சர்யப்படும் அளவுக்கான அசாத்தியமான ஒரு விஷயமாக அவர் இந்த களத்தைப் பார்க்கவில்லை. அவர் பல ஆண்டுகளாகவே இதற்காகத்தான் தயாராகியிருக்கிறார். இதற்குத் தான் உரித்தானவன் என்று நினைக்கிறார். அதனால் தான் அவரால் இயல்பாக இருக்க முடிகிறது. இந்த மிகப் பெரிய தொடரும், அதன் கவர்ச்சியும் எந்த வகையிலும் அவரை பாதிக்காமல் இருக்கிறது.