ஆற்றுப்படுகையில் ஆரம்பத்தில் மாதிரி துளைகள் இட்டு பாறைகளின் தன்மைகளை ஆராய்வது, இடங்களைத் தோண்டி எடுத்து அணை கட்டுமானத்திற்கு உகந்ததா என தரத்தை பரிசோதிப்பது, அடித்தளத்திற்கு தோதாக இருக்கிறதா என பரிசோதனைகளை மேற்கொள்வது போன்ற வேலைகள் அணை கட்டுமிடத்தில் மேற்கொள்ளப்பட்டன. 1926 ஆம் ஆண்டு மார்ச் மாதம், புவியியலாளர் டாக்டர் ஸ்மீத் (Dr. Smeeth) மற்றும் அதே ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அரசின் ஆலோசனை பொறியாளர் ஹாரிஸ், (D.G. Harris) அணைக்கட்டு இடத்திற்கு வருகை புரிந்து மாற்றம் செய்திருந்த புதிய இடத்தில் சைட்- Y (Site-Y) சுவர் அமையப்போகும் முழு நீளத்தில் ஆங்காங்கே 40 அடி ஆழம் வரை துளையிட்டு பாறைகளின் தன்மை மற்றும் பாறை அடுக்குகளின் அமைப்பு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தந்தனர்.
பாறைகளில் உள்ள பிளவுகள் மற்றும் நுண்துகள்களின் வழியாக அடித்தளம் அமைத்த பிறகு, நீர் கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதா என்பதையும் அதை உறுதி செய்ய துளையிட்டு, அதில் அதிக அழுத்தத்தில் சிமெண்டை திரவ வடிவில் செலுத்தி ஆராயப்பட்டது.
அடித்தளம் அமைக்கப்பட வேண்டிய நீள்வாக்கு இடம் முழுவதும் பாறைகளை பெயர்த்தெடுத்து, தேவையான அளவு ஆழமான பள்ளம் எடுத்து, ஒழுங்கற்ற பாறைகள் மற்றும் மென்மையான பாறைகள் இவற்றை வெட்டி அகற்றி, தட்டையான கெட்டியான பாறைகள் வரும்வரை பாறைகளை வெட்டியும், வெடி வைத்து தகர்த்தும், ஓரளவுக்கு சமதளம் அமைக்கப்பட்டது.
இப்படி சீர் செய்யப்பட்ட தளங்களையும் விஞ்ஞான முறைப்படியான சோதனைகள் செய்து ஆற்றின் குறுக்குவாட்டில் முழு நீளமும் பரிசோதித்து உறுதி செய்யப்பட்டது. எந்தவித சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்காமல் அடித்தளம் அமைக்க ஏதுவான இடம் என்பதை உறுதி செய்யப்பட்டது. தொழில்நுட்பமும், அனுபவமும் இணைந்து சிறப்பான அடித்தளம் அமைவதற்கு நிறைய வித்தியாசமான முறைகளை கையாண்டு உறுதியான அடித்தளம் (Foundation) அமைக்க உறுதி செய்யப்பட்டது.
நீர் ஊடுருவி கசிவு ஏற்படா வண்ணம் தடுக்க மேலே கூறப்பட்ட ‘கிரவுட்டிங்’ என்ற தொழில்நுட்பத்தை உபயோகித்து பாறையில் இருந்த நுண்துளைகள் அடைக்கப்பட்டன. அணை கட்டி முடித்து முழு கொள்ளளவில் நீர் தேங்கி நிற்கும் போது நீரின் அழுத்தம் காரணமாக, கசிவு ஏதேனும் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டால் அதற்கும் முன்கூட்டியே யோசித்து திட்டமிடப்பட்டு G.I குழாய்கள் எனப்படும் இரும்புக் குழாய்கள் பதிக்கப்பட்டு கசிவு நீர் சுரங்கம் வரை (Drainage gallery) கொண்டு வந்து அதன் வழியாக கிரவுட்டிங் செய்து கசிவுகள் ஏற்படுத்தும் துளைகளை அடைக்க முன்யோசனையாக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மலைப்பு ஏற்படுத்தும் இவ்வளவு வேலைகளும் மிகுந்த கவனத்துடன் செய்து முடிக்கப்பட்டன!