டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டம் நாடு தழுவிய போராட்டமாக மாறி இருக்கிறது. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்காக பல ஆயிரம் மாணவர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர்.
அவர்களுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. இப்போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இப்போராட்டத்திற்கு ஆதரவாக உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் இணைந்து மும்பையில் இரண்டு நாள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மும்பையில் தற்போது ஒரே இடத்தில் 5க்கும் அதிகமானோர் கூடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்தடையை மீறி இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்று நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும், மத்திய அரசின் அணுகுமுறையைக் கண்டிக்கவும் தாக்கரே சகோதரர்கள் இந்தக் கூட்டுப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இன்று இரு கட்சிகளும் இணைந்து மாலை 4 மணிக்கு தாதர் சிவாஜி பூங்காவில் உள்ள மீனாதாய் தாக்கரே சிலை அருகே பொதுக்கூட்டம் நடத்துவதோடு, அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு ‘ஒரே தேசம் ஒரே உணர்வு’ என்ற முழக்கத்தின் கீழ் தேசிய கீதமும் இசைக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் சிவாஜி பூங்காவில் இருந்து சித்திவிநாயகர் கோவில் வரை மூவர்ண கொடி ஏந்திய பேரணியை அறிவித்துள்ளனர். இரண்டு நிகழ்வுகளிலும் இந்தியக் கொடி மட்டுமே இடம் பெறும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
அவர் இது குறித்து மேலும் கூறுகையில், “நான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேசியுள்ளேன். ஞாயிற்றுக்கிழமை நடக்கும் மோர்ச்சாவை காங்கிரஸ் ஆதரிக்கக்கூடும். இந்த விவகாரம் நீட் தேர்வுக்கு அப்பால் சென்றுவிட்டது. பல ஆண்டுகளாக மோடி ஆட்சியில் மக்கள் மத்தியில் கொதித்தெழுந்த கோபம் வெடித்திருக்கிறது.
நீதிமன்றங்களில் நாய்களுக்கும் புறாக்களுக்கும் நேரம் இருக்கிறது; ஆனால் கரப்பான்பூச்சிகளுக்கு அல்ல. நீதிமன்றத்தின் நிலைமையும் திருதராஷ்டிரனின் நிலைமையாகிவிட்டதா? திரௌபதி, திருதராஷ்டிரனிடம் நியாயம் கேட்பது போல் உள்ளது. வன்முறையைத் தூண்டும் வகையில் போராட்டங்களில் பொதுமக்கள் உடையில் குண்டர்களை பாஜக அனுப்புகிறது”‘ என்று கூறினார்.