ஒன்றாக இரட்டையர்களாக பிறந்த இரண்டு சகோதரிகள் ஒரு வாலிபரை திருமணம் செய்துகொள்வதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஒன்றுக்கு மேற்பட்டவரை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிக்காவிட்டாலும், இது போன்ற திருமணங்கள் சட்டவிரோதமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் மூன்று சகோதரிகள் ஒன்று சேர்ந்து ஒரே வாலிபரை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
அங்குள்ள அம்ரோகா மாவட்டத்தில் உள்ள தோரியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். விவசாயியான இவருக்கு சரோஜ், சாவித்ரி, சந்தோஷ் ஆகிய மூன்று மகள்கள் இருக்கின்றனர்.
இந்த சகோதரிகள் மூன்று பேரும் சேர்ந்து ஒரே வாலிபரை திருமணம் செய்துகொள்வது என்ற முடிவில் இருந்தனர். அவர்கள் சொன்னது போல் அங்குள்ள சாமுண்டா கோயிலில் மூன்று பேரும் ஒரே வாலிபரை திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் அக்னியை மூன்று முறை வலம் வந்து திருமணம் செய்து கொண்டனர்.
அதோடு ஒருவரை ஒருவர் நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டனர். மேலும் அங்கு கூடியிருந்த பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதமும் பெற்றுக்கொண்டனர். இத்திருமணத்தில் பா.ஜ.க நகராட்சி தலைவர் ஒருவர் கலந்து கொண்டது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர்களது திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. ஆரம்பத்தில் இது ரீல்ஸ் வீடியோ என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் உண்மையிலேயே அவர்கள் மூன்று பேரும் ஒரே வாலிபரை திருமணம் செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து சமூக ஊடகத்தில் வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். அதில் நாங்கள் 100 சதவீதம் உண்மையிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளனர். அவை அனைத்தும் வைரலாகி இருக்கிறது.
நெட்டிசன்கள் நான்கு பேரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் மூன்று பெண்களின் பெற்றோர் தலைமறைவாகிவிட்டனர். மூன்று பேரும் சேர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் கணக்கு தொடங்கினர். அவர்கள் 27 வீடியோக்களை அதில் பகிர்ந்துள்ளனர். இதில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களை பெற்றிருக்கிறார்கள்.