Sports
oi-Yogeshwaran Moorthi
மியாமி: ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் நார்வே அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியின் 55வது நிமிடத்தில் நார்வே அணி அடித்த கோல் நடுவரால் ரத்து செய்யப்பட்டது மிகப்பெரிய திருப்புமுனையாக மாறியது. இதனால் நார்வே அணிக்கு அநீதி நடந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலியிறுதி சுற்றில் இங்கிலாந்து அணியை எதிர்த்து நார்வே அணி களமிறங்கியது. நார்வே அணியில் எர்லிங் ஹாலண்ட் மேஜிக்கை நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. ஆனால் எர்லிங் ஹாலண்ட் செய்த தவறே நார்வே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஆனால் 55வது நிமிடத்தில் நார்வே அணி அடித்த 2வது கோல், நடுவர்களால் ரத்து செய்யப்பட்டது. இதனால் நார்வே அணிக்கு அநீதி நடந்ததா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்தப் போட்டியின் முதல் பாதியிலேயே இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தனர்.
இதன்பின் 2ஆம் பாதியின் 55வது நிமிடத்தில் நார்வே அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. பேட்ரிக் பெர்க் கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பாஸ் கொடுக்க, அதனை நார்வே அணியின் ஹெக்கெம் கோல் ஆக்கினார். இதனால் 2வது கோலை அடித்துவிட்டதாக நார்வே அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் நடுவரிடம் சென்று முறையீடு செய்தனர்.
இங்கிலாந்து அணியின் எலியட் ஆண்டர்சன் கீழே விழுந்தது எப்படி என்று VAR சோதனை செய்யப்பட்டது. அதில் கார்னர் வாய்ப்பில் நார்வே வீரர் பந்தை உதைப்பதற்கு முன் எர்லிங் ஹாலண்ட், எலியட் ஆண்டர்சனை கீழே தள்ளியது தெரிய வந்தது. இதனை நடுவர் மீண்டும் ஆய்வு செய்தார். இதனால் ஹாலண்ட் செயல்பாடு விதிகளுக்கு எதிரானது என்பதால், நார்வே அணியின் கோல் ரத்து செய்யப்பட்டது.
இதுவே நார்வே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது. ஹாலண்ட் தவறு செய்யாமல் இருந்திருந்தாலே, நார்வே வீரர்கள் அதனை எளிதாக கோல் அடித்திருப்பார்கள். இதனால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கும் சென்றிருக்காது. கூடுதல் நேரத்தில் தான் இங்கிலாந்து அணியின் பெல்லிங்கம் 2வது கோலை அடித்தார். இதன் காரணமாக நார்வே ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.