India
oi-Hema Vandhana
கான்பூர்: உத்தர பிரதேசத்தில் மணமகள் வீட்டில் “வந்தே மாதரம்”, “ஜெய் ஹிந்த்” என்று எழுதப்பட்டிருந்ததால் திருமணத்தை நடத்த மதகுரு மறுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள மதகுரு வேறு ஒரு காரணத்தைக் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தில் அடுத்தடுத்து நடந்தது என்ன?
உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் ரோசா பகுதியைச் சேர்ந்தவர் மோனிஷ் பகத் சிங்… இவர் ஒரு வழக்கறிஞர்.. இவரது சகோதரிக்கு கடந்த நவம்பர் 15-ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உத்தர பிரதேச திருமணம்
இந்த திருமணத்தை சிறப்பாக நடத்தி வைக்க சுர்கான் என்ற மதகுருவை அழைத்திருந்தனர். திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தன. உறவினர்கள், நண்பர்கள் என பலரும் திருமணத்துக்கு வருவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.
இஸ்லாமிய முறைப்படி நிக்கா திருமணத்தை நடத்தி வைப்பதற்காக உள்ளூர் மதகுருவான சுர்கான் என்பவரும் மணமகள் வீட்டிற்கு வந்தார்.
அப்போது மணமகள் வீட்டின் பெயர்ப்பலகையில் வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இதைப் பார்த்த மதகுரு சுர்கான், டென்ஷனாகி விட்டார்.. இந்த வாசகங்கள் ஏன் எழுதப்பட்டுள்ளது என்று கேட்டு, திருமணத்தை நடத்த மறுத்து விட்டாராம்.
ஜெய் ஹிந்த, வந்தே மாதரம்
வீட்டின் பெயர்ப் பலகையில் வந்தே மாதரம் மற்றும் ஜெய் ஹிந்த் ஆகிய வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகத் தன்னால் இந்தத் திருமணத்தை நடத்தி வைக்க முடியாது என்றும் சுர்கான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்
கல்யாணத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நேரத்தில், திடீரென மதகுரு சொன்னதை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனால் செய்வதறியாது திகைத்தனர்.. திருமணம் நின்றுவிடுமோ என்ற இக்கட்டான சூழல் உருவான நிலையில், அந்த நேரத்தில் அந்த திருமணத்துக்கு வருகை தந்திருந்த ஷஃபிக் கான் என்ற இன்னொரு மதகுரு முன்வந்து, எந்தவிதத் தடையுமின்றி அந்தத் திருமணத்தை முறைப்படி நடத்தி வைத்தார். இதனால் திருமண நிகழ்வு சுமுகமாக நிறைவடைந்தது.
போலீசில் புகார்
எனினும் மதகுரு சுர்கான் கடைசி நேரத்தில் செய்த செய்கையால் மணப்பெண் வீட்டில் கொந்தளித்து விட்டார்கள்.. இந்தச் சம்பவம் குறித்து வழக்கறிஞர் மோனிஷ், நவம்பர் 19-ம் தேதி போலீசில் புகார் கொடுத்தார். மணமகள் வீட்டிலிருந்த தேசிய வாசகங்களை சுட்டிக்காட்டி திருமணத்தை நடத்த மறுத்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
மோனிஷ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நவம்பர் 20-ம் தேதி மதகுரு சுர்கானை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரின் முழுப்பெயர் முகமது சுர்பான் ரஸா காதிரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
விளக்கம் தந்த மதகுரு
இது குறித்து ஷாஜகான்பூர் நகரக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சொல்லும்போது, “மணப்பெண் வீட்டின் பெயர்ப் பலகையில் “வந்தே மாதரம்” என்று எழுதப்பட்டிருந்ததைக் காரணம் காட்டி நிக்கா நடத்தி வைக்க மறுத்த மதகுரு சுர்கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கில் மதகுருவுக்கு ஜாமீன் கிடைத்து, வெளியே வந்துவிட்டார். அத்துடன் தன் மீதான குற்றச்சாட்டை முகமது சுர்பான் மறுத்துள்ளார். திருமணத்தை நடத்த மறுத்ததற்கு வீட்டில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் காரணம் இல்லை என்றும், தன்னுடைய அப்பாவுக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டதால், திருமணத்துக்கு வர முடியாத நிலைமை ஏற்பட்டதாகவும், இதுகுறித்து முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

