பல்வேறு துறைகளை உள்ளடக்கிய வலுவான பொருளாதார அமைப்பு மற்றும் நமது தொழிலாளர்களின் உற்பத்தித் திறனைப் பிரதிபலிக்கும் வகையிலும், 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நமது அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையிலும், 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வதற்கு தமிழ்நாடு பணியாற்றி வருகிறது.
இந்தத் தொலைநோக்குப் பார்வை இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் விவசாயிகள் என்ற நான்கு முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றில் தமிழ்நாட்டின் முன்னுரிமைகள் ஒவ்வொன்றுடனும் நெருக்கமாக இணைந்துள்ளன. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும் பயணத்திற்கும் இன்றியமையாத சில முக்கிய முன்னுரிமைகளை, இம்மாண்புமிகு ஆட்சிமன்றத்தின் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
இந்தியாவின் மிகப்பெரிய வலிமை அதன் இளைய தலைமுறை மக்கள் தொகையாகும். இந்த இளைய தலைமுறை மக்கள்தொகைப் பலனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள, தமிழ்நாடு கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் தொடர்ந்து முதலீடு செய்யும்.
இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டு, ஆண்டுதோறும் ஐந்து இலட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பணியிடைப் பயிற்சிகள் (Internships) மற்றும் தொழில்துறையுடன் இணைந்த திறன் பயிற்சிகளை வழங்கும் “இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு இயக்கத்தை” (Youth Skill and Employment Mission) செயல்படுத்த விழைகிறேன். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மையங்களை அமைப்பதற்கும், செயற்கை நுண்ணறிவு, ஆழ்தொழில்நுட்பம் (Deep Technology), இணையப் பாதுகாப்பு, மேகக் கணினி தொழில்நுட்பம் (Cloud Computing), மின்சார வாகனத் தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்தி (Semiconductor) தொடர்புடைய துறைகளில் பயிற்சி அளிப்பதற்கும் ஒன்றிய அரசின் ஆதரவைக் கேட்டுக்கொள்கிறோம்.