நிர்வாகிகள் மீது முட்டை வீச்சு… அதிகரிக்கும் மக்கள் எதிர்ப்பு – கடும் நெருக்கடியில் மம்தா கட்சி!

Spread the love

மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க தலைமையிலான அரசு பதவியேற்றுள்ளது. பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. முதலில் அக்கட்சியின் செயலாளர் அபிஷேக் பானர்ஜி கட்சி நிர்வாகி ஒருவரை சந்திக்க சென்றபோது தாக்குதலுக்கு ஆளானார். அவரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினர். அதோடு திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் லஞ்சம் வாங்கிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அதிக அளவில் நடந்து வருகிறது.

மிட்னாபூரில், வீடு கட்டுமானத்திற்காகப் பணம் பெற்றுக்கொண்டு வாக்குறுதி அளித்தபடி வீடுகளை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி, திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி சுஜோய் ஹஸ்ரா பயணித்த வாகனத்தின் மீது அப்பகுதி மக்கள் முட்டைகளை வீசினர். கொல்கத்தாவில் நடந்த தனித்தனி குற்றங்கள் தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் பப்பாதித்ய தாஸ்குப்தா மற்றும் வடக்கு கொல்கத்தா கவுன்சிலர் முகமது ஜசிமுதீன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றபோது அங்கு மக்கள் கூடி அவர்கள் மீது முட்டைகளை வீசித்தாக்கினர்.

மம்தா பானர்ஜி

அவர்களை பொதுமக்களிடமிருந்து பத்திரமாக போலீஸார் அழைத்துச் சென்றனர். கொல்கத்தாவில் நடந்த இரண்டு சம்பவங்களிலும், காவல் நிலையங்களுக்கு வெளியேயும், வழியிலும் பெருந்திரளான மக்கள் கூடி, தலைவர்கள் மீது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளை எழுப்பி முழக்கங்களை எழுப்பினர். பலத்த பாதுகாப்புடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், ​​அவர்கள் மீது முட்டை வீசும் சம்பவங்கள் பதிவாகின. இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க அமைச்சர் இந்திரனில் கான், ”மக்களின் இந்த ஆவேசமான வெளிப்பாடுகள், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களால் அவர்கள் நீண்ட காலமாக அனுபவித்து வந்த சித்ரவதைகளின் வெளிப்பாடு ஆகும். பயம் நீங்கி, நம்பிக்கை பிறக்கட்டும் என்ற பிரதமர் மோடியின் முழக்கத்தின் மீதான நம்பிக்கையாலேயே மக்கள் இப்போது தங்கள் புகார்களைத் தெரிவிக்க முன்வருகிறார்கள்.”என்று தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்திற்கு சிக்கல்

கொல்கத்தாவில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டடத்தை திரிணாமுல் காங்கிரஸ் வாடகைக்கு எடுத்திருந்தது. வாடகை ஒப்பந்தம் கடந்த ஆண்டே முடிந்துவிட்டது. ஆனாலும் திரிணாமுல் காங்கிரஸ் அந்த இடத்தை காலி செய்யாமல் இருந்து வருகிறது. எனவே அந்த சொத்து தனக்கு கிடைக்க உதவவேண்டும் என்று கோரி அந்த சொத்தின் உரிமையாளர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். சொத்தின் உரிமையாளர் மொண்டு ஷாஹா மற்றும் அவரது மகன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமையன்று, இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பேசுவதற்காக கட்சியின் தலைமை அலுவலகம் இருக்கும் இடத்திற்குச் சென்றனர்.

ஆனால், கட்சியின் நிர்வாகிகள் யாரும் அங்கு இல்லை. சில மணிநேரம் காத்திருந்த பிறகு, அவர்கள் காவல் நிலையத்திற்குச் சென்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புதான் திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகம் இந்த இடத்திற்கு வந்தது. இது குறித்து மொண்டு ஷாஹா கூறுகையில்,”எங்கள் சொத்தை 2022-ஆம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸிற்கு வாடகைக்கு விட்டிருந்தோம். கடந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு, கட்டடத்தைத் திரும்பப் பெற விரும்புவதாகக் கூறி நாங்கள் பலமுறை அவர்களை அணுகினோம். அந்தக் கட்டடத்தில் பழுதுபார்ப்புப் பணிகள் செய்ய இருப்பதாக தெரிவித்தோம். ஜூலை மாதத்திற்குள் கட்டடத்தைக் காலி செய்துவிடுவதாக அவர்கள் எங்களிடம் கூறினர்.

ஆனால் எங்களுக்கு அது இப்போதே தேவைப்படுகிறது. சமீபகாலமாக, இது குறித்துப் பேசுவதற்கு அக்கட்சியில் யாரும் கிடைக்கவில்லை. எனவே, காவல்துறையை அணுகுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.” என்று தெரிவித்தார். கட்சியின் அசல் தலைமையகமான திரிணாமுல் பவனும் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. திரிணாமுல் பவன் இருக்கும் நிலம் தனது குடும்பத்துக்கு சொந்தமானது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ ஜாவேத் கான் கூறியுள்ளார். “அந்த கட்டடம் இருக்கும் இடம் எனது குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்கும் அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன,” என்று அவர் கூறினார். திரிணாமுல் பவனில் பழுதுபார்ப்பு பணிகள் நடக்க இருப்பதாக கூறி 2022ம் ஆண்டு புதிய அலுவலகத்திற்கு கட்சி அலுவலகத்தை திரிணாமுல் காங்கிரஸ் மாற்றியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *