கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் எல்லைக்குட்பட்ட மேட்டுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் அய்யப்பன். வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவருக்குச் சொந்தமான இரண்டு சர்வே எண்களிலுள்ள 10 சென்ட் நிலத்தை, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவருக்கு ரூ. 40 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். எனினும், விற்பனைப் பத்திரத்தில் ஒரு சர்வே எண்ணை மட்டும் குறிப்பிட்டுக் காட்டி முறைகேடு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அரிகிருஷ்ணன் வாரியூர் அஞ்சல், மேட்டுக்குடியிருப்பைச் சேர்ந்த ராமசந்திரன் என்ற ரியல் எஸ்டேட் புரோக்கர் மூலம் அந்நிலத்தை வனஜா என்பவருக்கு மறுவிற்பனை செய்துள்ளார். தொடர்ந்து, நிலத்தைக் காலி செய்து புதிய உரிமையாளரான வனஜாவிடம் ஒப்படைக்குமாறு ராமசந்திரன் வழக்கறிஞர் அய்யப்பனிடம் வலியுறுத்தி வந்துள்ளார்.
நிலத்தை விட்டுக்கொடுக்க விரும்பாத அய்யப்பன், அங்குள்ள தனது பழைய வீட்டில் பெற்றோரை தங்க வைத்ததுடன், தனது தந்தை சுயம்பு மூலம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமசந்திரன், தனது ஆதரவாளர்களுடன் கடந்த 22-ம் தேதியன்று ஜே.சி.பி இயந்திரத்துடன் சென்று அய்யப்பனின் வீட்டை இடிக்கத் தொடங்கியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அய்யப்பன், வீட்டை இடிப்பதைத் தடுத்து தகராறில் ஈடுபட்டார். அப்போது ராமசந்திரனும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து அய்யப்பனை அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்துத் தாக்கியதுடன், வீட்டை முழுமையாக இடித்துத் தள்ளினர். மேலும், நிலத்தை வனஜாவிடம் ஒப்படைக்குமாறு மிரட்டலும் விடுத்துள்ளனர். அய்யப்பனை மரத்தில் கட்டி வைத்திருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது.