மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் இந்த ஆண்டு தேர்வுக்கு முன்பே கசிந்தது. இதையடுத்து இந்த மாதம் 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்து இருக்கிறது. அதோடு அடுத்த மாதம் மீண்டும் நீட் தேர்வு நடத்தப்பட இருக்கிறது.
நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக நாடு முழுவதும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததில் மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரை சேர்ந்த வேதியியல் ஆசிரியர் சிவ்ராஜ் மொடெகாவ்கர் என்பவர் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.
வேதியியல் ஆசிரியரான சிவ்ராஜ் மகாராஷ்டிரா முழுவதும் ஆர்.சி.சி – ரேணுகாய் என்ற பெயரில் கோச்சிங் சென்டர் நடத்தி வருகிறார். மகாராஷ்டிரா கோச்சிங் கிளாஸ்கள் மட்டத்தில் “M Sir” என்று அனைவராலும் அழைக்கப்படும் சிவ்ராஜ் ஆரம்பத்தில் லாத்தூர் அருகில் இருக்கும் தனது கிராமத்தில் விவசாயம்தான் செய்து கொண்டிருந்தார்.

அதன் பிறகு அங்குள்ள கோச்சிங் சென்டரில் பயிற்சியாளராக சேர்ந்தார். அவர் படிப்படியாக அங்குள்ள அனைத்து கோச்சிங் சென்டர்களுக்கும் கிளாஸ் எடுத்து வந்த நிலையில் 1990களின் இறுதியில் 10 மாணவர்களோடு ஒரு வாடகை அறையில் கோச்சிங் கிளாஸ் ஒன்றை ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் வேதியியல் வினாக்களை தனது கைப்பட எழுதி மாணவர்களிடம் கொடுத்து படிக்க சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் படிப்படியாக அவரது கோச்சிங் சென்டர் வளர்ச்சியடைந்தது. ஒரு கட்டத்தில் லாத்தூர் மாடல் என்ற ஒன்றை சிவ்ராஜ் உருவாக்கினார். அனைத்து வகையான அரசு தேர்வு மற்றும் நீட் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்க ஆரம்பித்தார். அதோடு தனது கிளைகளை மகாராஷ்டிரா முழுவதும் விரிவுபடுத்தினார். இன்று, ஆர்.சி.சி கோச்சிங் சென்டர் ஆனது லத்தூர், புனே, நாசிக், சத்ரபதி சம்பாஜிநகர், நாண்டெட், சோலாப்பூர் மற்றும் கோலாப்பூர் உள்ளிட்ட நகரங்களில் பல கிளைகளுடன் இயக்கி வருகிறது.
ஆண்டுதோறும் சுமார் 40,000 மாணவர்கள் இதில் சேர்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கிராமப்புற பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு, வேதியியல் பாடத்தை எளிமையாக சிவ்ராஜ் கற்றுக்கொடுத்து மாணவர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கினார்.
இப்போது ஆர்.சி.சி சென்டர் டிஜிட்டல் கற்றல், மாநில அளவிலான தேர்வுத் தொடர்கள், வழிகாட்டுதல் திட்டங்கள் மற்றும் செயலி சார்ந்த கற்றல் முறைகளை அறிமுகப்படுத்தியது. தற்போது சிவ்ராஜ் கோச்சிங் சென்டர் மதிப்பு ரூ.1500 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வேதியியலில் எம்.எஸ்.சியில் தங்கப் பதக்கம் வென்றவரான மோட்டேகான்கர், ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட கல்வியாளராகக் கருதப்படுகிறார்.
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வேதியியல் பேராசிரியர் பி.வி. குல்கர்னியுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால், அவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குல்கர்னி கடந்த காலத்தில் ஆர்.சி.சி-யில் கற்பித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இருவருக்கும் இடையிலான தொழில்முறைத் தொடர்பு மற்றும் வினாத்தாள் கசிவுக்கும் உள்ள தொடர்பு குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.
நீட் தேர்வில் கசிந்த வினாத்தாள் ஆசிரியர் சிவ்ராஜ் மொபைல் போனில் இருந்ததை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சிவ்ராஜ் தனது பயிற்சி மையத்தில் வைத்து, தான் மாணவர்களுக்கு வழங்கிய கேள்விகளே இறுதி வினாத்தாளில் இடம்பெற்றிருந்ததாகக் கூறுவது போன்ற ஒரு காணொளியும் கைப்பற்றப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் NEET 2025 தேர்வில், இவரின் ஆர்.சி.சி பயிற்சி மையத்தில் படித்த 19 மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள AIIMS நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் லாத்தூர் அருகில் 8 ஏக்கரில் சொந்தமாக பள்ளி மற்றும் கல்லூரி அடங்கிய கல்வி வளாகம் ஒன்றையும் கட்டி வருகிறார். இதற்கு தேவையான பணம் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்தும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.