நீர் ஒரு தேசிய சொத்து; வெளியேற்றப்படுபவர்கள் 2 லட்சம் பேரா? விவாதம் | அணை ஓசை 19

Spread the love

“வெங்கடரமண அய்யங்கார் (சி.வி.வி) கூறியதை விட எங்கள் சேலம் மாவட்டத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மழைப் பொழிவும் மிகவும் குறைவு. இங்குள்ள மக்கள் பஞ்சத்தால் மலாயா (மலேசியா), சிலோன் போன்ற வெளிநாடுகளுக்கு வேலை தேடி பிழைப்பு நடத்தச் செல்கின்றனர். பலர் இரவோடு இரவாக ரகசியமாக லாரிகள் மூலம் இங்கிருந்து கடத்தப்படுகிறார்கள். பிறகு வெளிநாட்டுக்குச் செல்கின்றனர். எங்கள் நிலங்கள் பாழடைந்துள்ளன. பாசனம் இல்லாததால் விவசாயம் சிதைந்து போய் உள்ளது. இங்குள்ள மக்கள் நீர் கிடைத்தால் ஏக்கருக்கு ரூபாய் 30 வரை கூட கட்டணம் செலுத்த தயாராக உள்ளனர்” என்று உறுப்பினர் T. ஆதிநாராயணன் செட்டியார் வலியுறுத்தி பேசினார்.

மீண்டும் பேசிய சி.வி.வி, “திட்டம் குறித்து போதுமான கவனம் மேற்கொள்ளப்படவில்லை. இந்த அணை ஒரு வருடம் முன்பு கட்டப்பட ஆரம்பித்திருந்தால் 1924 இல் வந்த பெருவெள்ளம் அணையை முழுவதுமாக அடித்துச் சென்றிருக்கும். திருச்சிராப்பள்ளி உட்பட நதியின் இரண்டு பக்கங்களில் வசிக்கும் மக்கள் மூழ்கி இருப்பார்கள். நாங்கள் 40 ஆண்டுகளுக்கு மேல் காத்துக் கிடக்கிறோம். இப்போதும் கூட அரசு எங்களை புறக்கணித்தால் மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக சிதைத்து விடும்” என்றார்.

கோட்டி ரெட்டி அவர்கள் பேசும்போது, “நீர் என்பது தேசிய சொத்து. அது எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். செலவு அடிப்படையில் நீர் பங்கீடு செய்வதும், நீர் வரிவிகிதத்தை நிர்ணயிப்பது தவறு. தஞ்சாவூர் மாவட்ட நிலக்கிழார்களுக்கு சலுகை அளித்து, ஏழை மக்களை புறக்கணிப்பது மிகவும் அநீதி” என்று சாடினார்.

“பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் மாற்ற முயற்சிக்கிறார்கள். ஏழைகளுக்கு உதவுவது மிகவும் நல்லது. ஆனால், பணக்காரர்களுக்கு உதவக் கூடாது என்றும் நான் சொல்ல விரும்பவில்லை” என்றார் கோட்டி ரெட்டி.

உறுப்பினர் எல்லப்பா செட்டியார், “அணையின் பாதிப்பு அதிகம் ஏற்பட போகும் பகுதி சேலம், கோயம்புத்தூர் எல்லைகள் தான்! அங்குள்ள கிராமங்கள் நீரில் மூழ்கும்! அங்கேயே வாழ்ந்து வரும் மக்கள் வீடுகளை இழக்கிறார்கள். இப்படி வீடுகளை குலைத்து பாசன நீர் தராமல் விட்டு விட்டால், அவர்கள் மனதில் ஆழ்ந்த அதிருப்தி ஏற்படும்” என்று எச்சரிக்கை செய்தார்.

உறுப்பினர் எஸ் அற்புத சாமி உடையார், “சர்.ஆர்தர் காட்டன், பென்னிகுயிக் காலத்தில் இருந்து இது கவனத்தில் உள்ள திட்டமாகும், இந்த “காவிரி-மேட்டூர் திட்டம்”. கோயம்புத்தூருக்கு இரண்டு நதிகள் உள்ளன. பவானி மற்றும் அமராவதி. ஆனால், சேலம் மாவட்டத்திற்கு மாற்று வழி இல்லை. சில ஆயிரம் ஏக்கருக்காவது பாசனத்துக்கு நீர் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், இது திட்டமிடப்பட்ட புறக்கணிப்பு என்று மக்கள் கருதுவார்கள்” என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய டி எம் நாராயணசாமிப் பிள்ளை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் புறக்கணிக்கப்பட கூடாது. அங்கும் சில பகுதி விவசாயிகள் பாசன வசதி இன்றி தவிக்கிறார்கள் என்றார். பட்டுக்கோட்டைக்கு தண்ணீர் அளிக்கும் திட்டமானது, அங்கு குறைவான மக்கள் தொகையே இருப்பதால் பயனுள்ளதாக இருக்காது. ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவு, ஒன்றிரண்டு ஜமீன்தார்களால் மட்டுமே பகிரப்படும் நிலங்களாக உள்ளன என்றும் எச்சரித்தார்.

மக்கள் வெளிப்படையாகவே அதிக விகிதம் செலுத்தத் தயாராக உள்ள இந்த இரண்டு மாவட்டங்களை புறக்கணிப்பது அநியாயமாகும். அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றார் உறுப்பினர் பஷீர் அகமத் சயீத்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *