நீ இன்று அதை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறாய்” என்று மிகுந்த உணர்ச்சியுடன் கூறினார். அதற்குப் பிறகு, ஒரு நாள் பாரதிராஜா சாரை சந்தித்தேன். அன்று நான் பார்த்த பாரதிராஜா சார் ஒரு புகழ்பெற்ற இயக்குநர் இல்லை. தன் குழந்தை காயமடைந்ததைப் பார்த்து வருந்தும் ஒரு தந்தை. அவர் அமைதியாக என்னையேப் பார்த்தார்.
சில நிமிடங்கள் கழித்து அவர் மெதுவாக சொன்னார்: “இந்த உலகம் உன்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ,நீ உனது பாதைகளை நோக்கிச் செல்” என்றார். ஏனெனில் அந்த வார்த்தைகள் வெறும் ஆறுதல் வார்த்தைகள் அல்ல. அவை ஒரு வாழ்வியல் பாடம். அதனால்தான் இன்று அவரை நினைக்கும்போது, என் மனதில் முதலில் தோன்றுவது அவருடைய புகழோ சாதனைகளோ அல்ல.
ஒரு உடைந்த குழந்தையைத் தங்கள் அன்பால் மீண்டும் உயிர்ப்பித்த நல்ல மனிதரின் முகம் தான். சினிமா, இலக்கியம், காதல், வாழ்க்கை, மனிதர்கள், பயணம், கலை, என்று உலகின் எண்ணற்ற விஷயங்களைப் பற்றி நாங்கள் மூவரும் பேசியிருக்கிறோம். அந்த உரையாடல்களில் நான் ஒரு கேட்பவளாக மட்டும் இருக்கவில்லை. அவர்கள் என்னை ஒரு குழந்தையாகவும், ஒரு நண்பராகவும், ஒரு படைப்பாளியாகவும் மதித்து உரையாடினார்கள்.

என் வாழ்க்கையில் நான் மனதளவில் வலிமை பெறுவதற்கு காரணமானவர்களை எண்ணிப் பார்த்தால், அந்தப் பட்டியலின் முதல் வரிசையில் நிற்பவர்கள் பாரதிராஜா சாரும் மனோஜ் சாரும் தான். அதனால்தான், உலகம் என்ன சொன்னாலும், பாரதிராஜா சாரின் வார்த்தைகள் எனக்கு எப்போதும் ஒரு பாதுகாப்புக் கவசமாக இருந்தன. என் வாழ்க்கையில் பலரை சந்தித்திருக்கிறேன். பல முகங்களைப் பார்த்திருக்கிறேன். பல உறவுகளைக் கடந்திருக்கிறேன். ஆனால் பாரதிராஜா சார் மற்றும் மனோஜ் சாரை போன்ற தூய மனங்களை நான் என் வாழ்வில் மீண்டும் சந்திப்பேன் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் சில மனிதர்கள் நம் வாழ்க்கைக்குள் வருவதில்லை. அவர்கள் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறார்கள். அவர்கள் நம்மை வழிநடத்தும் விளக்குகளாக மாறிவிடுகிறார்கள்.