நெடுஞ்சாலைத்துறை வழிகாட்டி பலகையில் இந்தி.. சர்ச்சை வெடித்ததையடுத்து 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட்! | Hindi on Sathankulam Highway Signboard Sparks Row: Two Highways Officials Suspended

Spread the love

Tamilnadu

oi-Vignesh Selvaraj

தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் மாநில அரசின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப் பட்டிருந்த வழிகாட்டி பெயர் பலகையில் இந்தி எழுத்துகள் எழுதப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் – நாசரேத் இடையே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்பட்டது. இங்கு சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலம் அருகில் திருச்செந்தூர் ரோடு விலக்கு அருகில் புதிதாக வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

Hindi on Sathankulam Highway Signboard Sparks Row Two Highways Officials Suspended

இந்த வழிகாட்டிப் பலகையில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, நெல்லைக்கு செல்லும் வழித்தடங்கள் அம்புகுறியிட்டு காட்டப்பட்டுள்ளன. மேலும் அந்த வழிகாட்டுப் பலகையில், முதலில் ஊர் பெயர்கள் தமிழிலும், அடுத்து இந்தியிலும், 3-வதாக ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு உள்ளன.

மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்ட வழிகாட்டி பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமே எழுத்துகள் உள்ளன. ஒரு சில பெயர் பலகைகளில் இந்தி எழுத்துக்கள் கடைசியாகவே உள்ளன. ஆனால் சாத்தான்குளத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் தமிழுக்கு அடுத்தபடியாக இந்தியில் பெரியளவில் எழுத்துகள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இதையடுத்து திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்தி திணிப்பை மாநில அரசே மேற்கொள்வதா எனக் கேள்வி எழுப்பினர்.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் ஊர்ப்பெயர்கள் எழுதப்பட்டதைக் கண்டித்து பல போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், மாநில அரசே இந்தியில் ஊர்ப்பெயர்களை எழுதுவதை ஏற்க முடியாது. இதற்கு யார் காரணம்? என்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன.

தமிழ்நாடு அரசு வைத்த வழிகாட்டிப் பலகையில் இந்தியில் பெயர்கள் இடம்பெற்றதால் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து சாலை வழிகாட்டி பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்கள் அகற்றப்பட்டன. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *