அடிப்படை வசதிகளே குறைவாக இருக்கும் ஒரு கிராமத்தில், அடுத்த தலைமுறை கல்வியால் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு இளைஞர்கள் தொடங்கிய “பீம்ஜி புத்தகாலயம்’ இன்று வாசிப்பின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் அறிவுக் கூடமாக இருந்து வருகிறது.
“படிப்பின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்” இந்த ஒரு எண்ணம்தான் திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள செம்பத்திமேடு கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (22, Visual Communication) மற்றும் முகிலன் (22, B.Com) ஆகிய இரு இளைஞர்களை, பீம்ஜி புத்தகாலயம் என்ற இலவச நூலகத்தை உருவாக்கத் தூண்டியது.
கிராமங்களில் சாலை, பேருந்து, பள்ளி போன்ற அடிப்படை வசதிகளுக்கே இன்னும் பல இடங்களில் சவால்கள் இருக்கும் நிலையில், “அடுத்த தலைமுறையாவது கல்வியின் மூலம் முன்னேற வேண்டும்” என்ற சமூகப் பொறுப்புணர்வுடன் இவர்கள் இந்த நூலகத்தைத் தொடங்கி உள்ளனர்.

தொடக்கத்தில் அவர்களிடம் பெரிய நிதி எதுவும் இல்லை. கிராமத்தில் பயன்பாடின்றி இருந்த ஒரு பொதுஇடத்தைச் சுத்தம் செய்து, தங்களுடைய சேமிப்புப் பணத்தில் சீரமைத்தனர். அதன் பிறகு, நண்பர்களிடமும் கிராம மக்களிடமும் புத்தகங்கள் மற்றும் தேவையான உதவிகளை கேட்டனர். அந்தச் சிறிய முயற்சியே இன்று ஒரு நூலகமாக வளர்ந்திருக்கிறது.

தற்போது இந்த நூலகத்தில் சுமார் 100 புத்தகங்கள் உள்ளன. நாவல்கள், சிறார் புத்தகங்கள், புதிர் நூல்கள், பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள், போட்டித் தேர்வு நூல்கள், என பல்வேறு வகையான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. அறிவுச் செல்வம் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக உறுப்பினர் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.