கொலை, கொலை முயற்சி, மிரட்டல் உள்பட ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சாலமன் சாம் பிரபாகரை பாளையங்கோட்டை போலீஸார் ரௌடி பட்டியலில் வைத்திருந்தனர். அவருக்கு நிறைய எதிரிகள் இருந்துள்ளனர்.
நெல்லை, பாளையங்கோட்டை மனகாவலம் பிள்ளை நகரைச் சேர்ந்தவர் டேவிட் ராஜ் மகன் சாலமன் சாம் பிரபாகர். 34 வயதான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் நேற்றிரவு தனது வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்தபோது இரண்டு பைக்குளில் சிலர் வந்துள்ளனர். அவர்கள், சாலமன் சாம் பிரபாகருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இரவில் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு உறங்கச் சென்றுவிட்டனர்.
அந்தச் சமயத்தில், சாலமன் பிரபாகரிடம் பேசிக்கொண்டிருந்தவர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில், இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போது சாலமன் பிரபாகரிடம் வாக்குவாதம் செய்தவர்களில் இருவர், தாங்கள் ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். அதில் சம்பவ இடத்திலேயே சாலமன் பிரபாகர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் ஓடிவந்ததால் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் சம்பவத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அத்துடன், பாளையங்கோட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ், நெல்லை மாநகர நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து சாலமன் சாம் பிரபாகர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.