நெல்லை: `நான் சொல்ற இடத்துக்கு போயிட்டு வாங்க' – ஹெல்மெட் அணியாத SI ; நூதன தண்டனை வழங்கிய டி.ஐ.ஜி!

Spread the love

இரு சக்கர வாகன விபத்துகளில் சிக்குபவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு தலையில் காயம் ஏற்படுகிறது. இதில், 40 சதவிகிதம் பேர் உயிழப்பதாக தெரியவந்துள்ளது. ஹெல்மெட் அணிந்து பயணித்தால் சிறிய காயங்களுடன் உயிர்தப்பிக்கும் வாய்ப்பு உள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் தலைக்கவசம் அணியாமல் ஏற்படும் இருசக்கர வாகன விபத்து மரணங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் நடக்கும் மொத்த சாலை விபத்து மரணங்களுடன் ஒப்பிடுகையில், இருசக்கர வாகன விபத்துகளில் இறப்பவர்களில் சுமார் 87 சதவிதம் பேர் தலைக்கவசம் அணியாததால் உயிரிழப்பதாக காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனாலும் பொதுமக்களிடம் இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படாத நிலையே இருக்கிறது.

இந்த நிலையில், இருசக்கர வாகங்களில் பயணம் செய்பவர்கள், தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை நெல்லை சரகத்துக்கு உள்பட்ட குமரி, தென்காசி, தூத்துக்குடி,நெல்லை மாவட்டங்களில் காவல்துறை டி.ஐ.ஜி-யான திருநாவுக்கரசு ஏற்படுத்தி வருகிறார்.

தலைக்கவசம் அணியாமல் சென்றால், காவல்துறையினர் சாலையோரம் நிறுத்தி வைப்பதால் நேர விரயம் ஏற்படுவதோடு, அபராதம் கட்ட வேண்டிய நிலை உள்ளது.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காசி ராஜா

அதனால் பொதுமக்கள் பலரும் ஹெல்மெட் அணிந்து பயணிக்கப் பழகி விட்டனர். ஆனாலும், காவல்துறையினர், அரசுத் துறையினர் என சிலர் மட்டும் தங்களுக்கான சலுகையாகக் கருதி, ஹெல்மெட் அணிவதைத் தவிர்த்து வருகிறார்கள். அப்படியே, காவல்துறை வாகனத் தணிக்கையில் பிடிபட்டாலும் போலீஸாரிடம் பேசிச் சமாளித்துக் கொள்ளும் போக்கு உள்ளது.

இந்த நிலையில், திருச்செந்தூர் கோயிலில் சஷ்டி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யச் சென்ற நெல்லை சரக டி.ஐ.ஜி திருநாவுக்கரசு, செய்துங்கநல்லூர் பகுதியில் காவல்துறை உடை அணிந்த ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்வதைக் கண்டார். உடனடியாக அவரை நிறுத்தி விசாரித்ததில், செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றும் காசி ராஜா என்பது தெரியவந்தது. அவரிடம் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து அறிவுறுத்திய டி.ஐ.ஜி திருநாவுக்கரசு, அவரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைக்காய சிகிச்சை பிரிவை நேரில் சென்று பார்வையிட்டு வருமாறு உத்தரவிட்டார்.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைக்காயை சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருபவர்கள் அனுபவிக்கும் வேதனை, அவர்களின் உறவினர்கள் படும் துன்பங்கள் ஆகியவற்றை சிறப்பு எஸ்.ஐ-யான காசிராஜா நேரில் கண்டார்.

இது குறித்து கூறிய அவர், ” இரு சக்கர வாகன விபத்துகளில் சிக்கிய பலருக்கும் தலையில்தான் அடிபட்டு உள்ளது. சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதையும் பார்த்தேன். காயமடைந்தவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்காக உறவினர்கள் படும் கஷ்டம் அதிகம்.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய பலருக்கும் உடலில் லேசான காயம் மட்டுமே இருந்தபோதிலும் ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதைப் பார்த்தேன். ஹெல்மெட் அணிந்து பயணத்தில் இருந்தால் தாங்களும் சிரமப்பட்டு குடும்பத்தினரையும் துன்பப்படுத்த வேண்டிய நிலைமை உருவாகி இருக்காது.

இதையெல்லாம் பார்த்த பின்னர் இனி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தைத் தொடுவதில்லை என உறுதியேற்றுள்ளேன். அரசு மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் ஒரு முறை தலைக்காய சிகிச்சை பிரிவுக்கு நேரில் சென்று பார்த்தாலே ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் முழுமையாகப் புரிந்துவிடும். ஹெல்மெட் அணியாமல் சென்ற எனக்கு துறை ரீதியான தண்டனை அளிக்காமல் இந்த நல்ல வாய்ப்பை கொடுத்த டிஐஜி சாருக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்” என்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *