நேபாளத்தை திணறடித்த பேரழிவு… பின்னணியில் சீனாவா?   – Kumudam

Spread the love

நேற்று (ஆகஸ்ட்26) காலை சுமார் 9 மணியளவில் போதே கோஷி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, ரசுவா மற்றும் தாதிங் மாவட்டங்களை கடுமையாக பாதித்தது. பின்னர் நுவாகோட், சித்வான் உள்ளிட்ட பகுதிகளுக்கும் வெள்ளநீர் பரவியது. பல பாலங்கள், சாலைகள், கிராமங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் வெள்ளத்தில் சேதமடைந்தன.

ஆரம்பகட்ட செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில், நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் நிலையற்ற பாறைத் தொகுதி சரிந்து ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக இந்த திடீர் வெள்ளம் உருவாகியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், அந்தப் பகுதியில் நிலநடுக்கமும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, காலை 8.37 மணியளவில் திபெத் பகுதியில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, Centre for Policy Research நிறுவனத்தின் Strategic Studies துறையின் பேராசிரியர் பிரம்மா செல்லானி, இந்த பேரழிவு சீனாவின் இமயமலை அணை கட்டுமானத் திட்டங்கள் குறித்த அச்சத்தை மீண்டும் எழுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இமயமலை உலகின் அதிக நில அதிர்வு ஏற்படும் மலைத்தொடர்களில் ஒன்றாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இமயமலை நில அதிர்வு மண்டலத்தில் சீனா உலகின் மிகப்பெரிய அணையை கட்டி வருவது ஆபத்தானது என எச்சரித்துள்ளார். குறிப்பாக, அந்தத் திட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும், அதற்கு அப்பால் வங்கதேசத்துக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போதைய நேபாள வெள்ளத்துக்கு சீன அணை கட்டுமானமே நேரடி காரணம் என்பதற்கான உறுதியான ஆதாரம் இதுவரை வெளியாகவில்லை. பாறைச்சரிவு, பனிச்சரிவு, ஆற்றில் ஏற்பட்ட திடீர் நீர்ப்பெருக்கு மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட காரணிகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தியர்களும் மாயம்

இந்த வெள்ளத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் பலரும் சிக்கியுள்ளனர். நேபாள சுற்றுலா வாரியத்தின் தகவலின்படி, ரசுவா பகுதியில் 341 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் காணாமல் போயுள்ளனர். இதில் 133 பேர் இந்தியர்கள், 37 பேர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைலாஷ்-மனசரோவர் யாத்திரைக்காக திபெத் சென்றிருந்த இந்தியர்களில் குறைந்தது 59 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது. நேபாள அரசுடன் இணைந்து இந்தியர்களை விரைந்து மீட்கும் நடவடிக்கைகளிலும் தூதரகம் ஈடுபட்டுள்ளது.

தொடரும் அபாயம்

வெள்ளப்பெருக்கு ஓரளவு குறைந்தாலும் ஆபத்து முழுமையாக நீங்கவில்லை என நேபாள அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆற்றில் ஏற்பட்டுள்ள அடைப்புப் பகுதியில் தேங்கியுள்ள ஏரி முழுமையாக வடிந்துவிடாததால், போதே கோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் தொடர்ந்து அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள ராணுவம், ஆயுதக் காவல் படை மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 12 ஹெலிகாப்டர்களை நேபாள ராணுவம் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக களமிறக்கியுள்ளது.

இதனிடையே, வெள்ளத்தால் 354 மெகாவாட் மொத்த உற்பத்தித் திறன் கொண்ட 8 செயல்பாட்டில் இருந்த நீர்மின் திட்டங்களும், கட்டுமானத்தில் இருந்த 5 திட்டங்களும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தை உலுக்கியுள்ள இந்த திடீர் வெள்ளத்துக்கு இயற்கை காரணிகளே முதன்மையான காரணமா, அல்லது இமயமலைப் பகுதியில் நடைபெறும் பிரமாண்ட கட்டுமானத் திட்டங்களும் எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவுகளின் தாக்கத்தை அதிகரிக்குமா என்ற விவாதம் தற்போது தீவிரமடைந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *