அனைத்துச் சாலைகளும் ரோமை நோக்கி,(All Roads lead to Rome) என்று கூறுவதைப் போல,சுற்றுப்பட்ட அனைத்துக் கிராமங்களில் இருந்தும் நோயுற்றவர்கள்அவர் க்ளினிக்கை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தார்கள்.அங்கு வர முடியாத வயதான அவசர நோயாளிகள் வீட்டிற்கு அழைத்தாலும்,அங்கும் சென்று பார்த்து வருவாராம்.அவர் முதலிரவன்று கூட,அவசர அழைப்பு வந்து விட,உடனடியாகச் சென்று அந்த நோயாளியைப் பார்த்த பிறகுதான் வீடு திரும்பினாராம்.நோயாளிகளின் நிலைமை அறிந்து செயல்படுவாராம்.பலரிடம் பணமே வாங்க மாட்டாராம்.சிலருக்கு மருந்துகளை அவரே இலவசமாக வழங்கி விடுவாராம்.சுமார் 10 கி.மீ.,தள்ளியுள்ள எங்கள் கீழப்பெருமழையிலிருந்து பலர் ரெகுலராக அவரிடம்தான் செல்வார்கள்.அவர்களில் சிலருக்குப் பஸ் செலவைக் கூடக் கொடுத்து விடுவாராம்.பிணியாளரின் நோயை மட்டுமல்ல,அவர்களின் பொருளாதாரத்தையும் எடை போட்டு,அதற்கேற்றாற் போல் செயல்பட்ட உத்தமர் அவர்.
திருச்சி தேசீயக் கல்லூரியில் எம்.ஏ., படித்துக் கொண்டிருந்த நேரம்.விடுதி மாணவன் நான்.விடுமுறையில் ஊருக்கு வந்த எனக்குக் கைகால்களில் அரிப்பு.
சொரியச் சொரிய தடிப்பு.குறைவான விடுமுறைதான்.சரி!காலை!டாக்டரிடம்
காட்டி வந்து விடலாம் என்று சைக்கிளை எடுத்துக் கொண்டு நேராக அவர் வீட்டிற்குப் போனேன்.அழைப்பு மணியை அடித்து விட்டு உள்ளே பார்த்தேன்.லுங்கியுடன் அவர் தலை தெரிந்தது.அவர் குளிக்க ஆயத்தமாகியிருக்க வேண்டும்.ஸ்லாக் சர்ட்டின் பட்டனைப் போட்டபடி அவரே வந்து கதவைத் திறந்தார்.முன் அறையில் இருந்த க்ளினிக்கில் அமர வைத்துச் சோதித்த பின் ப்ரிஸ்கிரிப்ஷனை எழுதிக்கொண்டே,’சாதாரணந்தான்!சரியாயிடும்.நல்லாப் படிக்கணும்!’என்று கூறியபடி ப்ரிஸ்கிரிப்ஷனை நீட்டினார்.
பாக்கட்டுக்கு விரைந்த என் கையைப் பார்த்து,’ஒண்ணும் வேண்டாம்!’ என்று சிரித்தபடி வழியனுப்பினார்.
அன்று அவர்,’குளிச்சிட்டு வரேன்!வெயிட்!’என்று சொல்லியிருந்தால் கூட,காலப் போக்கில் நான் அதை மறந்திருப்பேன்!ஆனாலும் உடன் வந்து அட்டெண்ட் செய்தது உள்ளத்தில் கற்சிற்பமாகப் பதிவாகி விட்டது.
அவ்வளவு சிறந்த மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதுதான் கொடுமையின் உச்சம்!திருத்துறைப் பூண்டி நகரில் அவரின் இறுதிச் சடங்கிற்குக் கூடிய மாபெருங் கூட்டம் அதற்கு முன்பும் யாருக்கும் வந்ததில்லையாம்!அதற்குப் பின்பும் எவருக்கும் கூடியதில்லையாம்!
எமன் இரக்கமில்லாதவன்தானோ?!
-ரெ.ஆத்மநாதன்,
கூடுவாஞ்சேரி