பங்குச் சந்தை முதலீட்டை நம் மக்கள் தவிர்க்கக் காரணம், பயமா… சரியாகப் புரிந்து கொள்ளாததா?

Spread the love

நான் சமீபத்தில் ஒரு வீடியோவைப் பார்த்தேன். “‘பங்குச் சந்தையில் குறிப்பிட்ட சில துறைகள் மிகப் பெரிய அளவில் லாபத்தை அள்ளித் தந்துள்ளன. இந்த உண்மையை உங்களிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள்” என்று சொல்லி, கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் சில பங்குகள் அடைந்த பிசினஸ் வளர்ச்சியை எடுத்துக்காட்டி, அதனால் அந்தப் பங்குகள் விலை உயர்ந்ததை சதவிகிதக் கணக்கில் எடுத்துச் சொல்லி இருந்தார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும், ‘அடடா, எவ்வளவு பெரிய லாபத்தைப் பெறத் தவறவிட்டுவிட்டோமே’ என்று நினைத்து, வருந்தி இருப்பார்கள்.

ஆனால், இந்த வீடியோவைப் பார்த்த முதலீட்டாளர்கள் வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? பங்குச் சந்தை முதலீடு பற்றிய தங்கள் நம்பிக்கையையும் அணுகுமுறையையும் மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்களா? அப்படி மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை எனில், இன்னும் 10 ஆண்டுகள் கழிந்தபிறகும், வருந்திக்கொண்டேதானே இருப்பார்கள் இல்லையா?

பங்குச் சந்தை

பங்குச் சந்தை

இந்தியாவில் பங்குச் சந்தை முதலீடு என்பது கடந்த 2003-ஆம் ஆண்டு தொடங்கி வேகமாக முன்னேற்றம் காணத் தொடங்கியது. 1990-களின் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் பங்குச் சந்தையில் பல தில்லுமுல்லுகள் நடந்தது உண்மைதான். ஆனால், அப்படித் தில்லுமுல்லுகள் எப்போதெல்லாம் நடக்கிறதோ, அதன்பிறகு பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி தலையிட்டு, அந்தத் தில்லுமுல்லுகள் மீண்டும் நடக்காதபடிக்கு விதிமுறைகளை மாற்றி வருகிறது.

ஆனால், பங்குச் சந்தைகளின் செயல்பாடுகளை செபி அமைப்பு என்னதான் மாற்றினாலும், ‘பங்குச் சந்தை முதலீடு என்பது ஒரு சூதாட்டம். அதில் பணத்தைப் போட்டால் முழுப் பணம் காணாமல் போய்விடும்’ என்று மக்களிடம் உருவான எண்ணம் மாறவே இல்லை. இன்று வரை பங்குச் சந்தை முதலீட்டை சூதாட்டம் என்றும், அது பாதுகாப்பு இல்லாதது; ரிஸ்க்கானது என்றுதான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் முடிந்த அளவு பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் மறைமுகமாக முதலீடு செய்வதோ வேண்டவே வேண்டாம் என்று நினைத்து ஒதுங்கி நிற்கிறார்கள்.

ஆனால், ரியல் எஸ்டேட்டிலும், தங்கம் வாங்குவதிலும் பல விதமான ரிஸ்க்குகள் இருந்தாலும் இவற்றில் முதலீடு செய்யும் பணம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். நஷ்டம் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்து, 10, 20 லட்சம் ரூபாய் கிடைத்தால், நிலம் அல்லது தங்கம் வாங்கி வைப்பதுதான் மிகச் சிறந்த முதலீடு என்று நினைக்கிறார்கள். 90% பேர் அப்படித்தான் செய்தும் வருகிறார்கள்.

பெரும்பாலான மக்கள் இந்த முறையில் சிந்தித்து செயல்பட்டு வரும்போது, அவர்கள் பங்குச் சந்தையில் எப்படி முதலீடு செய்திருப்பார்கள்?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *