
தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் நவீன சிந்தனையாளர்களால் தன்னை புதுப்பித்துக்கொண்டே வந்திருக்கிறது. மண்பாண்டத் தொழிலாளியின் கைகளிலும் சிற்பி கையில் உள்ள உளியிலுமாக, பலப்பல வடிவங்கள் எடுத்து, வளர்ந்து, இன்றைக்கும் அதிசயமாகிக் கொண்டே இருப்பதுதான் சினிமா மேஜிக்! காட்சிகளில் நறுக்சுருக்கென வசனங்களை அமைத்து, தனக்கென புது பாணியை, பாதையை அமைத்தவர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.
நவீன இயக்குநர் என முதலில் பேரெடுத்தவர் ஸ்ரீதர். அதன் பிறகு சினிமாவை பாலசந்தர் பல்லாயிரம் அடிகள் முன்னேற்றிச் சென்றார். சொல்லப்போனால், பாலசந்தருக்கு முந்தைய இயக்குநர்களின் படங்களைப் பார்த்தும், நம்மிடம் இருந்து வராத சொல், சிகரத்தின் படங்களைப் பார்த்த சிலிர்ப்பில் நம்மை சொல்லவைத்தன. அந்த வார்த்தை… ‘டைரக்ஷன் டச்!’
பாலசந்தருக்குள் ஒரு பசி இருந்திருக்கிறது. அது கலைப்பசி என்றாலும் கூட வயிற்றுப்பசியின் மீது பேரன்பும் கருணையும் கொண்டே பசியை அணுகியிருக்கிறார்.
’அரங்கேற்றம்’ திரைப்படத்தையும் லலிதாவையும் எவராலும் மறக்கமுடியாது. இந்தப் படத்தில் என்னை நெக்குருக வைத்த காட்சிகள் பல உண்டு. வருடாவருடம் பிள்ளை பெற்றுக் கொண்டு, குடும்பமே கூட்டமாக இருக்கும் ஏழ்மையான வீடு. டைனிங் டேபிள் காட்சி. அதாவது தரையில் தட்டுடன் தம்பிகளும் தங்கைகளும் அமர்ந்திருக்க, அம்மா எம் என் ராஜம், மூத்தவள் லலிதாவை அதாவது பிரமிளாவை அழைத்து, ‘அரிசி இல்லை’ என்பதைச் சொல்லுவார். பிறகு பிரமிளா எல்லோரிடமும் ‘ஒரு விடுகதை சொல்றேன். சாப்பாடு வர்ற வரைக்கும் பொழுதுபோகுமே..’ என்று ‘அது இல்ல இது இல்ல, சமையலும் முடியல…’ என்று சொல்லச் சொல்ல, தம்பி கமல், தங்கைகள் ஜெயசுதா, ஜெயசித்ரா என ஒவ்வொருவருக்கும் உண்மை புரியவரும். ஒவ்வொருவராக, முகம் சுருங்கி, வயிறு சுருங்கி, எழுந்துபோவார்கள். இந்த விடுகதையோ, அரிசி இருந்தால்தான் சோறு என்பதெல்லாம் அறிய முடியாத சிறுமி, ‘எனக்கு பசிக்குதுக்கா’ என்று சொல்லும்போது, அட்சயப்பாத்திரமெல்லாம் வேண்டாம், ஒருகிண்ணத்துலயாவது சாதம் கொடுக்கணுமே’ என்று நெஞ்சுகனக்காத ரசிகர்களே இல்லை.
இதேபோன்றதான காட்சியாக, ‘வறுமையின் நிறம் சிகப்பு’ காட்சியும் அழவைத்துவிடும். சிரிக்கவும் வைத்து அழவும் வைக்கிறியேப்பா என பாலசந்தரை திட்டித்தீர்த்தார்கள் ரசிகர்கள்.
கமல், எஸ்வி சேகர், திலீப் நண்பர்கள். பட்டதாரிக்கு வேலை கிடைக்காத தேசப்பிரச்னை. அத்துடன் பொதுவுடைமையான பசிக் கொடுமை. ஸ்ரீதேவி வந்து, ‘சாப்பிட்டுட்டு வந்திருங்க. போனா எவ்ளோ நேரமாகுமோ தெரியலை’ என்று சொல்ல, அறைக்குள் நுழைந்து கதவு தாளிட்டு சாப்பிடுவார்கள். இல்லையில்லை… சாப்பிடுவது போல் பாவ்லா செய்வார்கள். ஒரு கையில் தலையில் அடித்துக்கொண்டும் இன்னொரு கையில் நெஞ்சைப் பிடித்துக்கொண்டும் பார்த்த எண்பதுகளின் ரசிகர்களில் நானும் ஒருவன்.
இத்துடன் நம்மை விட்டாரா பாலசந்தர்? விஷயத்தை உணர்ந்த ஸ்ரீதேவி, தன் வீட்டுக்கு அழைத்து, இருக்கிற காசில் இலைபோட்டு சாப்பாடு தயார் செய்வார். அங்கே படுத்தபடுக்கையாக இருந்த பாட்டியிடம் இருந்து ஒரு விக்கல். சோற்றைப் பிசைந்து வாயில் வைக்ககவிருந்த கமல் முதலானவர்கள் எழுந்து சென்று பார்க்க, பாட்டி இறந்துகிடப்பார். அந்த வேளையில், ஸ்ரீதேவியின் அப்பா ஒருவிரல் கிருஷ்ணாராவ், இலையில் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டுக்கொண்டிருப்பார். அதுவரை நமக்கு அழுகையை தந்த பாலசந்தர், இப்போது கோப உணர்வையும் பச்சாதாப உணர்வையும் ஒருசேர எழுப்பி, திகைக்கவைத்திருப்பார்.
’உன்னால் முடியும் தம்பி’. தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து மிகப்பெரிய ஹிட்டடித்த இந்தப் படம், தமிழுக்கும் வந்தது. பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை ஜெமினி கணேசன் வீட்டு டைனிங் டேபிளே, நமக்குள் பசியைக் கிளறிவிடும். அப்போது கமலை திட்டுவார். ‘உப்பு போட்டுத்தான் சோறு திங்கறியா?’ என்பார் ஜெமினி. ‘சாப்பிட்டுப் பாத்துட்டு சொல்றேனே’ என்பார் கமல். ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ என்று ஜெமினி சுடுசொல் வீசுவார். ‘அது மாட்டுக்குதானே’ என்று சிக்ஸர் அடிப்பார் கமல். ஒவ்வொரு டைனிங் டேபிள் காட்சியும் காமெடியில் ஆரம்பித்து, உதயமூர்த்தி மீது நம் மீதான இரக்கம் அடர்த்தியாகிக் கொண்டே இருக்கும்.
இசையே சேவை என்றிருக்கும் அப்பா ஜெமினி கணேசன். சமூக சேவையே முக்கியம் என்று மாறுகிற மகன் கமல். அப்படி மானிட சேவை செய்துவிட்டு வீட்டுக்குள் வருகிற கமலுக்கு, ஏக லட்சார்ச்சனை. ‘இதுக்கு தண்டனையா நான் சாப்பிடப்போறதில்ல. ரெண்டுநாளைக்கு நான் சாப்பிடமாட்டேன்’ என்று ஜெமினி சொல்லுவார். ஊருக்கு நல்லது செஞ்சும் அங்கீகாரம் இல்லாத கோபம் கமலுக்கு. விறுவிறுவென டைனிங் டேபிளுக்குச் சென்று அமருவார். சாப்பாடு போட அண்ணி மனோரமாவை அழைப்பார். அவரே தட்டில் சாத பதார்த்தங்களைப் போட்டுக்கொள்வார். அப்படி போட்டுக்கொண்டிருக்கும்போதே, ‘எனக்குப் பசிக்குது நான் சாப்பிடப்போறேன்’ என்று சாதத்தைப் பிசைந்தபடி தன் நிலையை விவரித்துக்கொண்டே இருக்கும் கமல், ஒருகட்டத்தில் சாப்பிடாமல் எழுந்துவிடுவார்.
பிறகொரு நாளில், வீட்டை வீட்டு வெளியேறி வாழும் கமல், அவரின் தங்கை, அண்ணி மனோரமா ‘என்ன சமையலோ…’ என்று பாடும் ப்ளாஷேக் பாடல் நம்மை குஷிப்படுத்தும். ‘அடியே மோகனா’ என்று வரும் போது மோகன ராகம், ‘கல்யாணி… கல்… ஆணி’ என்று பல ராகங்களை படையலாக்கியதெல்லாம் இளையராஜாவின் டைனிங் விருந்து! கையில் அஞ்சு பைசாவுடன் ஹோட்டலுக்கு வரும் நாகேஷின் ‘சர்வர் சுந்தரம்’ காட்சியையும் ‘எல்லோரும் மாவாட்டக் கத்துக்கிடணும்’ என்கிற ‘புதுப்புது அர்த்தங்கள்’ பாடல் காட்சியையும் பசியுடனும் உணவுடனும் சேர்த்து ‘டச்’ செய்திருப்பார் பாலசந்தர்.
அதேபோல், ராப்பிச்சை. அந்தக் காலத்தில் பகல்பிச்சை, ராப்பிச்சை என்றெல்லாம் வருவார்கள். அப்பார்ட்மெண்ட்,வில்லா என்றாகிவிட்ட இந்தக் காலத்தில் பிச்சை கேட்டு வரவும் முடியாது. வருவதுமில்லை. எண்பதுகளிலும் தொந்நூறுகளிலும் கூட, நாலுபேர் இருக்கும் வீட்டில் இன்னும் மூணுபேர் சாப்பிட உணவு தயாராக இருக்கும். திடீரென உறவினர்கள் வந்துவிடுவார்கள் என்றும் பசியுடன் பிச்சை கேட்டு வருவார்களே என்றும் சேர்த்து சமைத்த அம்மாக்களின் காலம் அது! சொல்லப்போனால், லச்சுமி அக்கா, ரங்கண்ணா, அஞ்சலைப்பாட்டி என்று தினமும் வந்து சாப்பாடு வாங்கிச் செல்கிறவர்களின் முகங்களும் இரண்டு கைகளையும் நீட்டி, ‘அம்மா, பிச்சைம்மா’ என்கிற குரலும் அப்படியே மனசில் அப்பிக்கிடக்கிறது.
‘அரங்கேற்றம்’ திரைப்படத்தில் ராப்பிச்சை கேரக்டர். எவராலும் மறக்கவே முடியாத காட்சிகள். ராமு சாஸ்திரிகள் வீடு ஏழைவீடுதான். ஆனாலும் நாலு பருக்கையாவது கொடுப்பார்களே என்று ராப்பிச்சைக்காரிக்கு நம்பிக்கை. ‘அம்மா, ராப்பிச்சைம்மா’ என்று வந்து கேட்பாள். ஒருகட்டத்தில், சாஸ்திரிகளின் மகன், ராப்பிச்சைக்கார அம்மாவிடம் சாப்பிடுவான். பசியை, அரைஜாண் அல்லாட்டத்தை இதைவிட எப்படிச் சொல்லமுடியும்?
இன்னொரு காட்சி. கிழிந்த புடவையை கட்டிக்கொண்டிருக்கிற பிரமிளாவுக்கு சிவகுமார் புடவை கொடுப்பார். அப்பா எஸ்வி சுப்பையாவுக்கு கடுங்கோபம். கடைசியில் தன் உணவையும் தனக்குக் கொடுத்த புடவையையும் ராப்பிச்சைக்கு கொடுப்பாள் லலிதா.
இவற்றையெல்லாம்விட, பொளேரென நம் முகத்தில் அறைவார் பாலசந்தர். தங்கைக்கு கல்யாணம். வெளியூரில் இருக்கிற அக்கா பிரமிளா வருவார். அம்மா எம் என் ராஜம், மகளின் கண்ணில் படாமல் அங்கே போனால் இங்கே வருவார். இங்கே வந்தால் அங்கே போவார். ஒருகட்டத்தில், நேருக்கு நேர் அம்மாவும் மகளும் பார்த்துக்கொள்வார்கள். அம்மாவின் வயிறைப் பார்ப்பாள். அம்மா கர்ப்பம் என்பதை அறிவார் பிரமிளா. நண்டும்சிண்டுமாக ஏகத்துக்கும் மகன், மகள்கள். போதாக்குறைக்கு மகளுக்குக் கல்யாணம். அம்மாவோ கர்ப்பம்.
அம்மாவை பார்க்க, அம்மாவோ வெட்கித்தலைகுனிய, அப்பா அங்கிருந்து நகருவதா, நிற்பதா எனத் தெரியாமல் முழிக்க… ‘அம்மா… ராப்பிச்சைம்மா’ என்ற குரலில், சகலத்தையும் சபலத்தையும் சொல்லியிருப்பார் இயக்குநர் சிகரம்.
பிறகு அதிகாலையில் வாசலில் கோலம் போடும் அம்மாவிடம், ‘உங்கிட்ட ஒன்னே ஒன்னு கேக்கறேன். இத்தனை வருஷமா நீயும் கோலம் போடுறியே. இது உன் கண்ணுல ஒருதடவை கூட படலியா?’ என்பார். எதிரில் உள்ள சுவற்றில், குடும்பக்கட்டுப்பாடு விளம்பரம்! சிரித்துச்சிரித்தே செரித்துபோனது ரசிகர்களின் வயிறு! அப்படியே பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளையையும் உதயமூர்த்தியையும் பார்ப்போம்.
உதயமூர்த்தி சிறுவன். பிரமாண்டக் கோயில். பார்வையற்ற பாட்டியம்மா. யாரோ ஒரு வாழைப்பழம் தர, அந்தப் பழத்தைத் தொடும்போது, கொஞ்சம் தள்ளி உருண்டுவிடும். பாட்டியால் எடுக்கமுடியாது. துழாவியபடி முனைகிற பாட்டி, அந்த குளத்துப்படிக்கட்டுகளில் சட்டென விழுவார். இதையெல்லாம் பார்க்கிற சிறுவனுக்கு இது வேடிக்கை. சிரிப்பான். அங்கே இருக்கிற சித்தர் போல இருக்கிற பிச்சைக்காரர், ‘கண்ணு தெரியாத அந்தப் பாட்டிக்கு உதவி செய்யணும்னு உனக்கு தோணலியா?’ என்று கேட்பார். ‘சாமி உன்னை மட்டும் காப்பாத்தணுமா’ என்றும் அடுத்த கேள்வி கேட்பார். ‘கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற ரெண்டு கைல ஒரு கை, நமக்கு. இன்னொரு கை, அடுத்தவங்களுக்கு உதவி செய்றதுக்கு’ என்று சொல்லுவார்.
‘அக்கம்பக்கம் பாரடா சின்னராசா’ என்ற எஸ்பிபி நம் மனசாட்சியை தட்டி உசுப்புவார். இன்னொரு சந்தர்ப்பத்தில், அப்பாவும் இசைக்கு குருவுமான ஜெமினி, மகனும் சிஷ்யனுமான கமலுக்கு சங்கீதம் கற்றுக்கொடுத்துக்கொண்டிருப்பார். அவர் சொல்ல இவர் மறு பாட்டு பாடுவார். அப்போது, ‘அம்மா… ராப்பிச்சைம்மா… பசிக்குதும்மா… பசி உசுரு போகுதும்மா’ என்று கிழவியின் குரல், கமலின் செவிகளை நிறைக்கும். கோபமாவார் ஜெமினி. சாதகம் பண்றபோது புத்தி எங்கேயும் அலைபாயக்கூடாது. ஸ்வரத்துலதான் இருக்கணும்’ என்பார். மீண்டும் ராப்பிச்சை பாட்டியின் குரல். ‘இந்த பிச்சைக்காரியோட குரலா? இது அபஸ்வரம்’ என்பார் ஜெமினி. ‘பசின்னு ஒரு குரல். இதை அபஸ்வரம்னு சொல்லாதீங்கப்பா’ என்பார் கமல்! இப்படி படங்கள் வழியே, நமக்கும் இந்தச் சமூகத்துக்குமான உறவை உணர்த்திக்கொண்டே இருப்பார் பாலசந்தர்!
‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழிப்போம்’ என்றார் பாரதி. ‘பசி வந்தால் பத்தும் பறந்துபோகும். இப்போ பதினொன்னாவதா பாரதியும் பறந்துபோயிட்டாரு’ என்று புத்தகங்களை எடைக்கு போடுகிற கமல் சொல்லுவார்… ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தில்! பாலசந்தர் எனும் இயக்குநர் சிகரத்தின் படைப்புகள், கதை மாந்தர்கள், காட்சிகள், வசனங்கள் நம்மை என்னவோ செய்யும்? ‘நான் மாது வந்திருக்கேன்’ என்று கையில் தட்டேந்தி நிற்கிற நாகேஷ்களைப் போல், ‘சாப்பிட்டியா, ஏதாவது சாப்பிடுறியா’ என்று எவரேனும் கேட்கமாட்டார்களா.. என்று கையேந்திக்கொண்டிருப்பவர்களின் மனமறிந்து உதவி செய்தால், மந்திரம் ஜபிக்கவேண்டாம் என்பதுதான், பாலசந்திர கம்யூனிஸம்; சித்தாந்தம்!