`முதல்வர் விஜய் பவுண்டேஷன்: தொழில் தொடங்க கடனுதவி’ – சைபர் கிரிமினல்கள் புது வழியில் மோசடி!

Spread the love

இணைய தளம் மூலம் மோசடி செய்பவர்கள் தங்களது மோசடிக்கு புதுப்புது வழிகளை கண்டுபிடிக்கின்றனர். சமீபத்தில் தொடங்கப்பட்ட வாக்காளர்கள் சரிபார்ப்பு திட்டமான எஸ்.ஐ.ஆர் மூலம்கூட சைபர் கிரிமினல்கள் பொதுமக்களை ஏமாற்றி இருக்கின்றனர். இப்போது புதிதாக தமிழக முதல்வர் விஜய் பெயரைப் பயன்படுத்தி மத்திய பிரதேசத்தில் ஒரு கும்பல் பொதுமக்களை ஏமாற்றி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் செயல்படும் விஜய் பவுண்டேஷன் மூலம் தொழில் தொடங்க கடன் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வந்தது.

அதோடு சைபர் கிரிமினல்கள் போன் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு விஜய் பவுண்டேஷன் மூலம் நிதியுதவி, கடன், கல்விக்கடன், ஸ்டார்ட் அப் தொழில் கடன், மானியம் வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர். அதில் மயங்கும் நபர்களிடம் ஒரு பதிவு இணைப்பை அனுப்பி அதனை பூர்த்தி செய்யச் சொல்லி இருக்கின்றனர்.

பதிவு செய்து அனுப்பியவுடன் பதிவுக்கட்டணம், சரிபார்ப்பு கட்டணம் என பல்வேறு வகையாக கட்டணங்களைக் கூறி அதனை தாங்கள் சொல்லும் வங்கிக் கணக்குக்கு டிரான்ஸ்பர் செய்யச் சொல்வது வழக்கம்.

அதனை நம்பி இந்தூரைச் சேர்ந்த ஏராளமானோர், சைபர் கிரிமினல்களிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். அவர்கள் அதிகபட்சம் தலா ரூ.50 ஆயிரம் வரை கொடுத்துள்ளனர். பணம் கட்டியவர்களுக்கு எந்த வித நிதியுதவியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் இந்தூர் போலீஸில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து கூடுதல் டி.ஜி.பி ராஜேஷ் கூறுகையில், “‘மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, நன்கு அறியப்பட்ட ஒரு பொதுப் பிரமுகரின் பெயரை இணையக் குற்றவாளிகள் பயன்படுத்திக்கொள்கின்றனர். இம்மோசடிக்குப் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறிய அலைபேசி எண்கள், பணப் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் பிற டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்து வருகிறோம். மேலும், இந்த மோசடியில் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்” என்றார்.

முதலமைச்சர் விஜய் பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரம் மற்றும் சந்தேகத்திற்குரிய போலி அறக்கட்டளை தொடர்பான விவரங்களை, இந்தூர் குற்றப்பிரிவு போலீஸார், தமிழ்நாடு போலீஸாருக்குத் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *