பஞ்சம், காலரா, பெருவெள்ளம்; வேலைநிறுத்தம் காணாத கட்டுமானம் – தொலைநோக்கு முன் தணிக்கை முறை | அணை ஓசை

Spread the love

அணையில் நீர் முழு அளவில் தேங்கி நிற்கும்போது நீர்மட்டம் எங்கெல்லாம் பரவி நிற்கும் என்பதை அளந்து, அந்த நிலங்களை அரசு கையகப்படுத்தியது. ஏற்கனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்திருந்த மேட்டூர் கிராமம், இந்த மாற்றங்களுக்குப் பிறகு “மேட்டூர் தாலுகா” என்று வரையறுக்கப்பட்டுச் சேலம் மாவட்டத்திற்குள் ஒரு தாலுகாவாக இணைக்கப்பட்டது. இது காவல்துறை மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு வசதியாக இருக்கும் என்ற காரணங்களால் இம்மாதிரியான மாற்றம் செய்யப்பட்டது.

உள்ளூர் நிர்வாகம்:

இத்திட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து மேட்டூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் அமைந்த அரசு சார்ந்த குடியிருப்புகளின் கட்டட வேலை மற்றும் நிர்வாக வேலைகளை உள்ளூர் அமைப்பான “மேட்டூர் குழு” ஒன்று நிர்வாகித்து வந்தது (Mettur Township Committee). இதில் வருவாய், உடல்நல ஆரோக்கியம் போன்ற பிரிவுகள் பொதுப்பணித்துறை அங்கங்களாகச் செயல்பட்டு வந்தன. மேட்டூர் அணை திட்ட “செயற்பொறியாளர்’ ஒருவர் (குடியிருப்பு மற்றும் கட்டடங்கள் பிரிவு) அதிகாரப்பூர்வ உறுப்பினராகவும் அங்கம் வகித்தார். அதில் பல உறுப்பினர்களும் இடம் பெற்றிருந்தனர். கமிஷனர், இன்ஜினியர் இன் சீஃப், மற்றும் தலைமைப் பொறியாளர் (ஒர்க்ஸ்) மூவரும் வரிசைக்கிரமமாக, அந்தக் கமிட்டியின் சேர்மன் பதவியை வகித்தனர்.

உள்ளூர் மருத்துவம் மற்றும் உடல்நலம் என்ற பிரிவுகள் நேரடியாக நிர்வாகப் பிரிவின் கீழ் செயல்பட்டன. தொழில்நுட்பச் செயல்பாடுகள் மாவட்ட மருத்துவ அதிகாரி (கோவை) (District Medical Officer) அவர்களாலும், பொது சுகாதார இயக்குநர், மெட்ராஸ் அவர்களின் மூலமும் செயல்பட்டன.

இந்த மாதிரியான உள்ளூர் நிர்வாகம் மிகவும் மெச்சத்தகுந்த வகையில் செயல்பட்டது. அணை கட்டும் பணி முழுவதும் முடிந்த பிறகு இந்தக் கமிட்டி கலைக்கப்பட்டு, பின்னர் மேட்டூரில் நீர்மின் நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு அங்கு நிறைய தொழிற்சாலைகள் வர ஆரம்பித்தவுடன் மீண்டும் “மேட்டூர் நகரியக் குழு” என்ற பெயரில் உள்ளூர் நிர்வாகம் செயல்பட ஆரம்பித்தது!

கொத்து வேலை மற்றும் கான்கிரீட் – விலை விகிதங்கள்

அணை கட்டப்படும்போது அதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை, கட்டுமானச் செலவு போன்ற அனைத்து விவரங்களும் மிகவும் கவனமாகக் குறித்து வைக்கப்பட்டுத் தரவுகள் பாதுகாக்கப்பட்டன. இதனால், இறுதியாகப் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் அளவுகள், மொத்தக் கூலி மற்றும் மொத்தச் செலவுகளைத் துல்லியமாகப் பெற முடிந்தது.

மொத்தமாக 5,46,20,100 கன அடி கட்டட வேலையும் (சுமார் ஐந்தரை கோடி கன அடி), கான்கிரீட்டும் அதற்கான செலவு ரூபாய் 1,95,11,834/- எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *