நம் மனதுக்கு நெருக்கமானவரின் இழப்புகள் சில நேரங்களில் நம்மை பெரும் சோகத்தில் உலுக்கி விடும். அப்படி என் இதயத்தைக் கணக்க செய்தது ஆர்.பி.சௌத்ரி சாரின் மரணம்.
அவரின் அறிமுக நாள்கள் இப்போதும் பசுமையாக நிழலாடுகின்றன. தி.நகரின் நார்த் போக் ரோட்டில் உள்ள சூப்பர் குட் அலுவலகத்திற்குச் சென்றால் சௌத்ரி சாரை பார்க்க பெரிய கூட்டமே திரண்டிருக்கும். அத்தனை பேரும் உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், அவர்களிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு வருபவர்கள் என நாளைய இயக்குநர்களும், நடிகர்களின்களின் க்யூவே களைகட்டும்.
அத்தனை பேரும் அவரிடம் கதை சொல்வதற்காகக் காத்திருப்பார்கள். காரணம், தேவர் ஃபிலிம்ஸ், மாடர்ன் தியேட்டர்கள் போல, சூப்பர் குட் ஃபிலிம்ஸின் கதை இலாகா கிடையாது. கதைகள் கேட்பதற்காக பத்து, பதினைந்து பேர் கொண்ட குழு கிடையாது சௌத்ரி சாரே்தான் கதை கேட்பார். கதை பிடிச்சிருந்தால் உடனே “ஓகே’ என ரிசல்ட்டையும் சொல்லிவிடுவார். பலரின் வாழ்க்கை அந்த ஒரே நாளில் வெளிச்சம் பரவிவிடும்.
தயாரிப்பில் 100வது படத்தை நெருங்கிவிட்ட அவர், “ஒரு படம் ஓடும்னு நூறு சதவிகிதம் என்னால ஜட்ஜ் பண்ண முடியாது. ஆனா, என் மைன்ட்டுக்கு தோணின கண்டிப்பாக அது ஓரளவுக்காவது ஓடக்கூடியதுனு தெரிஞ்சிடும். அதே சமயம் என்னோட செலக்ஷன் கூட எடுபடாமல் போயிருக்கிறது.
‘புதுவசந்தம்’, ‘பெரும்புள்ளி’ ரெண்டுமே நான் தேர்ந்தெடுத்த கதைகள்தான். ‘புதுவசந்தம்’ சூப்பர் ஹிட். ‘பெரும்புள்ளி’ படுஃபிளாப். ஸோ, வெற்றியை யாராலும் நூறு சதவிகிதம் கணிக்க முடியாது” என ஒளிவு மறைவின்றி சொல்லியிருக்கிறார்.
ஒருவர் கதை சொல்லும் போதே சரியாகக் கணித்து விடுவார். அதைப் போல சில இயக்குநர்களுக்கு கதை சொல்ல வராது. மேடையில் பேசுவதை போல ஒரு தயக்கமும், படப்படப்பும் இருக்கும். ஆனா, சௌத்ரி சார் ஆளை பார்த்ததும் எடை போட்டுவிடுவார்.
அவருக்கு கதை சொல்ல வரவில்லை என ரிஜக்ட் செய்யாமல், ‘ஸ்கிரிப்ட்டைக் கொடுத்துடுங்க. படிச்சிட்டு சொல்றேன்’ என்பார். அப்படி அவர் கதைகளைப் படித்துவிட்டு அன்றே அந்த இயக்குநரைக் கூப்பிட்டு, ‘இந்த வாரமே பூஜை போட்டிடலாம்பா’ என்று சொல்லியிருக்கிறார். அந்த இயக்குநர்கள் இப்போது பெரிய இயக்குநர்களாக இருக்கிறார்கள்.
எப்போதும் தினமும் அலுவலகம் வந்துவிடும் சௌத்ரி சார், வந்ததும் முதல்வேலையாக அலுவலகத்தின் கீழ்த் தளத்தில் உள்ள பூஜை அறைக்குச் சென்று, பக்தி உருக வணங்கிவிட்டு அதன்பிறகே முதல்மாடியில் இருக்கும் தன் அறைக்குள் செல்வார். அங்கேயும் அவருக்காக பெரிய இயக்குநர்கள் சிலர் காத்திருப்பார்கள்.