முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால்தான் துணிக்கடைகளிலும், மால்களிலும் கூட்ட நெரிசல் இருக்கும். ஆனால், இன்றைக்கு எப்போது பார்த்தாலும் கடைகளில் பரவலாகக் கூட்டம் இருக்கவே செய்கிறது. காரணம், ஷாப்பிங் செல்வது என்பது முன்பு தேவைக்காக மட்டுமே இருந்தது. ஆனால், இப்போது பலருக்கும் அது ஜாலிக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் என மாறிவிட்டது எனலாம். ஓரளவு சம்பாதிக்கும் இளைஞர்கள் தேவை இருக்கிறதோ இல்லையோ ஜாலியாக ஷாப்பிங் போவதை விரும்புகிறார்கள்.
இதுமட்டும் அல்லாமல் இன்னும் சிலர் மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஷாப்பிங் போகிறார்கள். இன்னும் சிலர் அதிக மகிழ்ச்சியாக இருந்தாலும் ஷாப்பிங் போகிறார்கள்; அதிக கோபமாகவும், எரிச்சலாகவும் இருந்தாலும் ஷாப்பிங் போகிறார்கள். இன்னும் சிலர், ‘என் சித்தி பொண்ணு புது பிராண்ட் மொபைல் வாங்கிட்டாள்; என்னிடம் அது இல்லேன்னா சொந்தக்காரங்க மதிக்கமாட்டாங்க…’ என்றெல்லாம் காரணங்களைச் சொல்லி, மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஷாப்பிங் செய்கிறார்கள்.

ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் எந்த மனநிலையில் ஷாப்பிங் போனாலும் பெரிதாக பாதிப்பு வராமல் தப்பித்துக்கொள்வார்கள். ஆனால், அவர்களைப் பார்த்து, பட்ஜெட்டுக்குள் செலவை அடக்க முடியாத நிலையில் இருப்பவர்களும், நடுத்தர வருமானக்காரர்களும் ஷாப்பிங் லைஃப் ஸ்டைலை ஃபாலோ செய்து, கட்டுப்பாடில்லாத ஷாப்பிங் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால் நிச்சயம் அவர்களை அறியாமலேயே பணக் கஷ்டத்தை நோக்கித் தள்ளிவிடும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.
பெரும்பாலானோரை பணக் கஷ்டத்தை நோக்கித் தள்ளும் சில சூழல்களையும், தவிர்க்கும் வழிகளையும் குறித்துப் பார்ப்போம்.
1. ஆஃபர் என்றதும் வாங்கும் அவசரம்!
‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’, ‘இன்று மட்டும் 50% தள்ளுபடி’, ‘கடைசி வாய்ப்பு இதுதான்’ என்பது போன்ற விளம்பரங்கள் நம்மை அவசரமாகப் பொருள்களை வாங்கத் தூண்டும். இதுபோன்ற ஆசையையும், பதற்றத்தையும் தூண்டும் வாசகங்கள் நம்மை சிந்திக்க விடுவதில்லை. அந்தப் பொருள் நமக்குத் தேவையா, அதைப் பயன்படுத்தப்போகிறோமா என்றெல்லாம் யோசிக்காமல், விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக பெரும்பாலானோர் வாழ்க்கையில் எப்போதுமே பயன்படுத்தாத பொருள்களைக்கூட வாங்கி பரண்மீது போட்டு வைத்துள்ளதைப் பார்க்கலாம். உடனடியாகவோ அல்லது ஆறு மாதங்களில், ஒரு வருடத்துக்குள்ளாகவோ பயன்படுத்தாத பொருளை உணர்ச்சிவசப்பட்டு வாங்கி என்ன பயன் என பலரும் யோசிப்பதில்லை. அந்தப் பொருள் தேவையா என்று யோசிக்காமல் வாங்குவது, உண்மையில் நமக்கு இழப்புதானே தவிர லாபமில்லை.
பாதி விலை என்றாலும், 90% தள்ளுபடி என்றாலும், ‘அந்தப் பொருள் அவசிய தேவையா?’ என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டு, சரியான பதில் கிடைத்தாலே தவிர வாங்காமல் தவிர்ப்பதே நல்லது.

2. மனநிலைக்காக ஷாப்பிங் செய்வது!
சிலர் மனைவியிடம் சண்டைப் போட்டுக்கொண்டு, அந்தச் சூழ்நிலையை மறப்பதற்காக மால்களுக்குச் சென்று நினைத்தபடி செலவு செய்துவிட்டு வருவதைப் பார்க்கலாம். அதேபோல் கணவரிடமோ உறவிர்களிடமோ மனக்கசப்பு வரும் சூழ்நிலையில் பலரும் மனதுக்குப் பிடித்த பொருள்களை வாங்குவதன் மூலம் மனநிலை சந்தோஷமடைவதாகச் சொல்கிறார்கள். வேலையில் பிரச்னை, குடும்பத்தில் மனக்கசப்பு, பிள்ளைகளிடம் பிரச்னை, பெற்றோர்களிடம் பிரச்னை… இதுபோன்ற பல காரணங்களால் மன அழுத்தத்தில் இருப்பவர்கள், தங்களுக்குப் பிடித்த பொருள்களை வாங்குவதன் மூலம் மகிழ்ச்சியடைய முயற்சி செய்கிறார்கள். ஆனால், அந்த மகிழ்ச்சி தற்காலிகமானது என அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அத்தியாவசிய செலவுக்கு வைத்திருந்த பணத்தை வெட்டியாகச் செலவு செய்த பிறகு வருத்தபடுகிறவர்கள் ஏராளம். பிறகு பண நெருக்கடி வரும்போதுதான் தன் தவறை உணர்கிறார்கள்.
மனைநிலை சீராக ஷாப்பிங் செய்வதும், வீண்செலவு செய்வதும் சரியான அணுகுமுறை அல்ல என்பது கொஞ்சம் அமைதியாக அமர்ந்து யோசித்தாலோ புரிந்துவிடும்.
3. மற்றவர்களைப் பார்த்து வாங்குவது!
நண்பர் புதிய மொபைல் வாங்கிவிட்டார், உறவினர் விலை உயர்ந்த கார் வாங்கிவிட்டார், மைத்துனர் சிம்லா டூர் செல்கிறார், சக ஊழியர் பிராண்டட் ஆடைகளை அணிகிறார் என்பதற்காக பலரும் அவர்களைப் பின்பற்றி செயல்பட்டு, பிறகு பணச் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். மற்றவர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்காக நமது வருமானத்துக்கு மீறிச் செலவு செய்வது ஆபத்தானது என்பதை முன்கூட்டியே நிறைய பேர் உணர்வதில்லை.
மற்றவர்களின் லைஃப் ஸ்டைலை ஃபாலோ செய்வதற்கு முன், அவர்களின் வருமானம், பொருளாதாரச் சூழல் என்ன, நம்முடைய பொருளாதாரச் சூழல் என்ன என்று ஒரு நிமிடம் யோசித்தாலே ஷாப்பிங் விஷயத்தில் கவனமாக இருக்க முடியும்.
4. கிரெடிட் கார்டு இருக்கிறதே என்ற தைரியம்!
கையில் பணம் இல்லாவிட்டாலும், கிரெடிட் கார்டு மூலம் பொருள்களை வாங்கிவிடலாம் என்ற எண்ணம் பலருக்கு செலவு செய்யும் துணிச்சலைத் தந்துவிடுகிறது. கிரெடிட் கார்டில் செலவு செய்வதை நிறைய பேர் கடனில் பொருள் வாங்குகிறோம் என்றே நினைப்பதில்லை. உரிய தேதியில் பணம் செலுத்த முடியாமல் திண்டாடும் போதுதான், யோசிக்காமல் செலவு செய்துவிட்டோமே என நினைக்கிறார்கள். முழுத் தொகையையும் உரிய காலத்தில் செலுத்த முடியாமல் பலரும் வட்டி, தாமதக் கட்டணம் செலுத்தும் நிலையை உருவாக்கிக்கொண்டு அவதிப்படுவதைப் பார்க்கலாம். இதுபோன்ற நிலை வராமல் இருக்க, முடிந்தவரை பண நிர்வாகத்தைச் சரியாகச் செய்ய முடியாதவர்கள் கிரெடிட் கார்டு வைத்துக்கொள்வதையே தவிர்ப்பது நல்லது.
5. இ.எம்.ஐ சலுகைகளில் மயங்குவது!
மாதம் ரூ.1,000, ரூ.2,000 என்ற அளவில் மட்டுமே செலுத்தினால் போதும் என்ற விளம்பரங்களைப் பார்த்ததும் மிக எளிதாகத் தோன்றலாம். இதனால் பலரும் ஒரே நேரத்தில் ஐந்து ஆறு எனப் பொருள்களை வாங்கிக் குவித்துவிடுகிறார்கள். ஆனால், ஒரே நேரத்தில் பல பொருள்களுக்கு இ.எம்.ஐ கட்டும்போது, மாத வருமானத்தின் கணிசமான பகுதி தவணை கட்டவே சென்றுவிடுகிறது. அத்தியாவசியச் செலவுகளுக்கும், சேமிப்புக்கும் பணம் ஒதுக்க முடியாத நிலை ஏற்படும்போதுதான் பலருக்கும் என்ன தவறு செய்திருக்கிறோம் என்றே தெரியவருகிறது.
மாத வருமானத்தில் 10% என்ற அளவுக்கு மேல் பொருள்களுக்கான இ.எம்.ஐ போகாமல் பார்த்துக்கொள்வதே நல்லது. வீட்டுக் கடன், கார் கடன் இ.எம்.ஐ செலுத்தும் நிலையில் இருப்பவர்கள், பிற பொருள்களை தவணையில் வாங்குவதைத் தள்ளிப் போடுவதே நல்லது.

6. சோஷியல் மீடியா தூண்டில், ஆன்லைன் பழக்கம்!
சோஷியல் மீடியாக்களில் வரும் விளம்பரங்கள் எளிதாக நம்மை ஈர்க்கின்றன. பார்த்தவுடன் அந்தப் பொருளை வாங்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகின்றன. ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தபடியே சில நிமிடங்களில் பல பொருள்களை வாங்க முடிவதால், யோசிக்க அவகாசம் எடுத்துக்கொள்ளாமல் செலவு செய்து விடுகிறார்கள். பல குடும்பங்களில் இந்தப் பொருளை வாங்கலாமா என்று குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துபேசும் நிலைகூட இல்லை என்பதே நிஜம். தேவையில்லாத நேரங்களில் ஷாப்பிங் ஆப்களை பார்க்காமல் இருப்பதே நல்லது. நவீன வியாபார உலகில் புதிது புதிதாக தயாரிப்புகள் வந்துகொண்டேதான் இருக்கும்; அதைப்பற்றிய விளம்பரங்களும் வந்துகொண்டேதான் இருக்கும். புதிய மாடல் வந்துவிட்டது என்பதற்காக வாங்க வேண்டியதில்லையே.
நம்மிடம் இருக்கும் பண இருப்பு என்ன, முக்கியமாகக் காத்திருக்கும் செலவுகள் என்ன என்பதை கவனத்தில் வைத்துக்கொள்வதே, விளம்பரத் தூண்டிலில் சிக்காமல் தப்பிக்க வழி.
மூன்று கேள்விகள் முக்கியம்!
ஆன்லைனிலோ ஆஃப்லைனிலோ எப்படியாக இருந்தாலும் ஷாப்பிங் செய்வதற்கு முன், அந்தப் பொருள் தேவையா, வாங்குவதற்கு நம்மிடம் பணம் இருக்கிறதா, வாங்கிய பிறகு சேமிப்பு பாதிக்கப்படுமா என்ற மூன்று கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்வது முக்கியம். அவசரமில்லாத பொருள்களை வாங்குவதற்கு முன் இரண்டு மூன்று நாள்கள் தள்ளிப் போடலாம். மாதாந்தர பட்ஜெட் போட்டுச் செலவு செய்யும் பழக்கத்தை வைத்துக்கொண்டால், அவசியமற்ற ஷாப்பிங்கை ஓரளவு தவிர்க்கலாம்.