விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நேற்று (அக்.11) நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய விசிக மூத்த தலைவரும் அமைச்சருமான வன்னியரசு, கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம்பெற்றுள்ளது.
கூட்டத்தில் பேசிய அவர், “த.வெ.க கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்தால் விசிகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு கடந்த பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து பதிலளித்து வருகிறோம். பதில் சொல்லி வாயும் வழித்துவிட்டது.
இப்போதும் சொல்கிறேன், சாதியவாதத்தைப் பிடிக்கும் பாமகவுடனோ அல்லது மதவாதத்தை முன்னிறுத்தும் பாஜகவுடனோ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் தேர்தல் கூட்டணி வைக்காது. ஒருவேளை தவெக கூட்டணியில் பாமக அதிகாரப்பூர்வமாக நுழைந்தால், நாங்கள் உடனடியாக அந்தக் கூட்டணியை விட்டு வெளியேறிவிடுவோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அமைச்சர் பதவியோ அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவியோ ஒரு பொருட்டே அல்ல, தேர்தல் பதவிகள் இன்று இருக்கும், நாளை இல்லாமல் போகலாம்.
விசிக என்பது திமுக, அதிமுக போன்ற சராசரி அரசியல் கட்சி கிடையாது. சாதி ஒழிப்பு மற்றும் சனாதன ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் களமாடும் ஒரு உன்னதமான விடுதலை இயக்கம். எங்கள் தலைவர் திருமாவளவனின் கட்டளைகளை ஏற்றுச் செயல்படும் ஒரு அடிமட்டத் தொண்டனாகவே நான் இந்த மேடையில் நிற்கிறேன்” என்றார்.
மேலும் அவர், “இன்றைக்குத் தேர்தல் பிழைப்புவாதத்திற்காகத் தமிழ்த்தேசியத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்கள் மற்றும் போலித் தேசியவாதிகளுக்கு மத்தியில், கொள்கை ரீதியாகச் சாதி ஒழிப்பை முன்னிறுத்தியே எண்களின் இயக்கம் தொடர்ந்து பயணிக்கும்.
மக்களைச் சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் சனாதனப் பிடியிலிருந்து விடுவிப்பதே எண்களின் உயிர் மூச்சு. எந்தக் காலத்திலும் பதவிக்காகத் கொள்கைகளைக் கைவிடப் போவதில்லை” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்காக பாமகவிடம் ஆதரவு கோரும் முடிவில் தவெக இருந்ததாக கூறப்பட்ட நிலையில், விசிக கூட்டணியில் இருப்பதால் அது சரியாக இருக்காது என்று தலைமை எண்ணியதாக கூறப்படுகிறது. அதனால், பாமக அதிமுகவுக்கு ஆதரவு அளிக்காமல் இருந்தாலே தங்களுக்கு பயனளிக்கும் என்று தவெக தலைமை நினைத்துள்ளது. இதற்கிடையில், அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்தார். இதையடுத்து, இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தவெகவுக்கு பாமக வாக்குகள் பக்கபலமாக இருந்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும், இடைத்தேர்தல் முடிந்த பிறகு பாமக தவெக கூட்டணியில் இணையும் என்றும் சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதிவு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியானது. அனால் இவை அனைத்தும் வதந்தி என சௌமியா அன்புமணி மறுப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது, வெளியேறிவிடும் என அடிக்கடி விசிக கூறிவருவது தவெக தலைமைக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

