சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் தனித்துப் போட்டியிடும் முடிவு எப்படி உருவானது?
2019 முதல் அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்ததால், 2026 சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க. எங்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், உதாசீனப்படுத்தினர். ‘தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தாலும் பரவாயில்லை. அமைச்சரவையில் எங்களுக்கு இடம் வேண்டும்’ என்று கேட்டோம். எடப்பாடி பிடிவாதமாக மறுத்துவிட்டார். தென் மாவட்டத்தைச் சேர்ந்த சில அதி.மு.க. நிர்வாகிகள், புதிய தமிழகம் இல்லாமலேயே வாக்குகளை ‘வாங்க’ முடியும் என்று நினைத்தனர். சுயமரியாதையை இழக்க விரும்பாமல் புதிய தமிழகம் தனித்து களம் கண்டது.”
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் இணைந்தால், குதிரை பேரம் என்று குற்றம்சாட்டுகிறீர்களே?
“சட்டமன்றத்தில் மே 13ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அ.தி.மு.க. கொறடாவின் உத்தரவை மீறி, ஆதரவு நிலைப்பாடு எடுத்த எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித்தாவல் “தடைச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, ஆதரவு நிலைப்பாடு எடுத்த எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து தங்கள் பதவியை காப்பாற்றிக்கொண்டனர். அடுத்த பத்து நாட்களில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, ‘புது ரூட்’ எடுத்து த.வெ.கவில் இணைந்தனர். இவர்களை இந்த முடிவை எடுக்க தூண்டியது எது? ஆசை வார்த்தைகள் கூறி, பேரம் பேசித்தான் இவர்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளனர். ஜனநாயகத்திற்கு எதிரான இந்த செயல்பாட்டை நாங்கள் எதிர்க்கிறோம். இதை அனுமதித்தால் வருங்காலத்தில் எந்த அரசும் நிலையாக இருக்காது.”
குதிரை பேரம் நடத்திய கட்சி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிதானே கவர்னரைச் சந்தித்தீர்கள்?
“கவர்னரிடம் மனு அளித்து 20 நிமிடங்கள் இதுகுறித்து விளக்கிக் கூறினேன். ‘இதில் நான் எப்படி தலையிட முடியும்?’ என்று கவர்னர் கேட்டார். ‘யூ ஆர் த கான்ஸ்டிடியூஷன் அத்தாரிட்டி’ என்று சொன்னேன். தமிழகத்தில் நிலையற்ற ஒரு ஆட்சியை உருவாக்கும்போது நீங்கள் தலையிட வேண்டிய பொறுப்பு இருக்கிறது. தமிழ்நாட்டின் நிலைமை குறித்து நீங்கள் மட்டும்தான் மத்திய அரசுக்கு சொல்ல முடியும் என்றேன். பொறுமையாக கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டுக்குள் தவறு நடக்காதவரை யாரும் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஒரு தவறு நடந்தால் அதை தட்டிக்கேட்கும் ‘பவர்’ கவர்னருக்கு இருக்கிறது.”
த.வெ.க. கூட்டணி ஆட்சி அமைத்தது வரவேற்பிற்குரியதுதானே?
“சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க.விற்கு மக்கள் பெரும்பான்மை கொடுக்கவில்லை. அதனை விஜய் ஒப்புக்கொள்ள வேண்டும். அதுதான் ஜனநாயகம். அதை விடுத்து எதிர்முகாமைச் சேர்ந்தவர்களின் ஆதரவை, ஆட்சி அமைக்க கேட்கும்போது மனசாட்சி உறுத்தவில்லையா? பதவிக்காக விஜய் எதை வேண்டுமானாலும் செய்யலாமா? பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சட்டமன்றத்தைக் கூட்டி ஆட்சி அமைக்க எனக்கு ஆதரவு கொடுங்கள் என்று விஜய் வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும். பிரதமர் வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் இதுபோல் ஆதரவு கேட்டிருக்கிறார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் வாஜ்பாய் தேர்தலை சந்திக்க வந்துவிட்டாரே. அந்த துணிவு விஜய்க்கு ஏன் வரவில்லை?”
த.வெ.க. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வி.சி.க., தி.மு.க.வுடன் நட்புறவுடன் இருப்பதாக சொல்கிறதே?
“கடந்த மே 8ம் தேதி, ‘பிளாக்மெயில் செய்து காரியம் சாதிக்க நினைக்கும் சந்தர்ப்பவாதிகளை சார்ந்து இருப்பது பேராபத்தாகவும், பல சமயங்களில் அவமானகரமாகவும் மாறக்கூடும். ஓரிரு இடங்களின் பற்றாக்குறையால் இன்று ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், மக்களின் பேராதரவுடன் மீண்டும் நாளை எழ முடியும் என்ற நம்பிக்கையுடன் விஜய் செயல்பட வேண்டும்’ என நான் பதிவிட்டேன். அதை பொருட்படுத்தாமல், எதிர்முகாமில் இருந்து ஆதரவுபெற்று ஆட்சி அமைத்ததால் வந்த விளைவு இது. ஆனால், விஜய்யுடன் இருந்தவர்கள், பதவி ஆசையால் அவரை தவறாக வழிநடத்தி இந்த நிலையில் நிறுத்தியிருக்கிறார்கள்.”
‘விரைவில் தேர்தல் வரும்’ என ஸ்டாலின் கூறுகிறாரே?
“அதற்கு சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை”
தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தீவிரமாகியுள்ளனவே?
‘இதனால் எந்த பலனும் இருக்காது. உதாரணமாக, நெடுஞ்சாலைத்துறையில் பல ஆயிரம் கோடிக்கு பணிகள் நடந்துள்ளன. ஆனால், ரூ. 3 கோடி முறைகேடு நடந்ததாக வழக்கு பதிவாகியுள்ளது. இதுபோன்ற பலவீனமான குற்றச்சாட்டுகளால் எந்த பலனும் இருக்காது.”
‘அரசு பணி ஒப்பந்ததாரர்கள் பார்ட்டி ஃபண்ட் கொடுக்க வேண்டியதில்லை’ என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்திருக்கிறாரே?
“இதை ஆதவ் அர்ஜுனா சொல்லும்போதுதான் மிகப்பெரிய சந்தேகம் வலுக்கிறது.”
த.வெ.க. ஆட்சியில் கரெப்ஷன், கமிஷன் ஒழிந்துவிட்டதாக வைகோ சான்றிதழ் கொடுத்திருக்கிறாரே?
“அவர் யாரை ஆதரிக்கிறாரோ அவர்களைக் குற்றம் சொல்லமாட்டார். பாராட்டு மட்டுமே வழங்குவார். ஆதரவை விலக்கிக்கொண்டால் மட்டுமே குற்றம் சொல்வார். இது அவருடைய கொள்கை”
இதுவரையில் இல்லாத அளவுக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த 8 பேருக்கு அமைச்சரையில் இடம் கிடைத்திருப்பது பற்றி…
‘இதனால் யாருக்கு என்ன லாபம்? பட்டியலினத்தில் மூன்று பெரிய சமுதாயங்கள் உள்ளன. அதில் ஒரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் 6 அமைச்சர் பதவி, பாடநூல் கழகத் தலைவர் பதவி, துணை சபாநாயகர் பதவிகளை கொடுத்துவிட்டு, பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுத்ததாக தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது.”


