ஜோதிடர் குறித்துக் கொடுத்த `மேஜிக்’ டைம்..!
புதுச்சேரி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதியிலும், பா.ஜ.க 4 தொகுதியிலும், அ.தி.மு.க மற்றும் `லாட்டரி’ ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் ல.ஜ.க தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைக்கு, ஆட்சி அமைப்பதற்கு 16 தொகுதிகள் தேவை. அதன்படி 18 இடங்களில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏ-க்கள், சட்டமன்றக் குழு தலைவராக ரங்கசாமியை தேர்வு செய்தனர்.

தொடர்ந்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி. குடியரசுத்தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்ததையைடுத்து, ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர்.
ஆன்மிகம், ஆருடம் போன்றவற்றில் அதீத நம்பிக்கை உடையவரான ரங்கசாமி, பதவியேற்புக்காக தன்னுடைய ஜோதிடர் குறித்துக் கொடுத்த நேரத்தை ஆளுநர் மாளிகைக்கு தெரிவித்தார். அதையடுத்து புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் (தற்போது லோக் நிவாஸ்) இன்று காலை 9.47 மணிக்கு ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்றுக் கொள்வார் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.