ஒரு ரவுடி தன் தவறுகளை உணர்ந்து திருந்துகிறார் என்கிற ஒன்லைனை சுவாரஸ்யமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். ‘பத்தா’ நிகழ்த்தும் ஏடாகூடங்கள், அவரின் பின்னணி எனப் படம் மெதுவாக நகரத் தொடங்குகிறது. பத்தாவைப் பற்றி குழந்தைகளிடையே பரப்பப்படும் ஃபேண்டஸி பொய்கள், அதனால் பயம் கொள்ளும் சிறுவன் போன்றவை க்யூட்டான கவிதைகள். அதுவே பத்தா கழிவறையில் சிக்கிக் கொண்ட பின்னர் கலகல காமெடி தோரணம் கட்டத் தொடங்கிவிடுகிறது திரைக்கதை! தண்ணீர் நிரம்பிய தொட்டி, வாலிகள், பாம்பு, நொறுக்கப்பட்ட பொறை, பெயருடன் கிழிக்கப்பட்ட நோட்டுப் புத்தகத் தாள் உள்ளிட்ட விஷயங்களை நகைச்சுவைக்கும், எமோஷனுக்கும், ட்விஸ்ட்டுக்கும் பயன்படுத்தியது இயக்குநரின் சாமர்த்தியம்!

அதிர்ச்சி தரும் இடைவேளையை எட்டும் படம், ட்விஸ்ட்டோடு இரண்டாம் பாதியை எதிர்நோக்க வைக்கிறது. சிறுவனின் பயம் ஒருபுறம் என்றால் அதற்கு பத்தா கொடுக்கும் ரியாக்ஷன்கள் ‘கிச்சு கிச்சு’ மூட்டுகின்றன. சிறுவன் ஆபத்தில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்ற பதைபதைப்பும் படம் முழுக்கவே இருப்பது ப்ளஸ்! மூடியிருக்கும் பள்ளிக்கு பத்தா ஏன் சென்றார் என்று கேள்வியோடு நம்மைக் கடைசி வரை கூட்டிச் சென்றதும், அதனை க்ளைமாக்ஸில் இணைத்த விதம் நல்லதொரு சிறுகதை டச்! ஆனால், சிறுவன் தப்பிப்பதற்காக நிகழ்த்தும் போராட்டத்தைத் தேவைக்கு அதிகமாக நீட்டிச் சொல்லியிருப்பதும் லேசாக சோம்பலூட்டுகிறது.