`பனையும் கடலும்தான் எங்கள் வாழ்வும் போராட்டமும்’ – பெற்றோர் வாழ்வியலை ஆவணப்படுத்திய பிள்ளைகள் | palms-sea-life-and-struggle-documentary

Spread the love

பனைத் தொழிலாளர்களின் வலி…

பனை என்றதும் நுங்கும், கள்ளும் தான் பலரின் நினைவில் தோன்றும். ஆனால், அந்தப் பனை மரத்தின் உச்சியில் தினமும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் பனைத் தொழிலாளர்களின் வலிகளையும், அவர்களின் வாழ்வாதாரப் போராட்டங்களையும் அறிந்தவர்கள் மிகக் குறைவு.

அந்தச் சமூகத்தின் வலியை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் விவரிப்பதைவிட, அதற்குள் பிறந்து வளர்ந்த பிள்ளைகளின் பார்வையில் அந்தக் கதை சொல்லப்படும்போது, அது அனைவரின் மனதையும் நேரடியாகத் தொட்டுச் செல்கிறது.

அரசு பள்ளி மாணவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் கன்னிகா புரி, நரிப்பையூர் மற்றும் கீழ அல்லிக்குளம் பகுதிகளில் வசித்து வரும் அரசு பள்ளி மாணவர்கள், அவர்கள் பகுதியில் செய்யும் தொழிலான பனை மற்றும் கடல் சார்ந்த தொழில்களில் மக்கள் எவ்வாறெல்லாம் சிரமப்படுகிறார்கள் என்பதை புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தியிருக்கின்றனர்.

250 புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள இந்தப் புகைப்படக் காட்சியானது, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் பனை மற்றும் கடல் சார்ந்த தொழில்கள் குறித்த உணர்வுபூர்வ புரிதலை ஏற்படுத்தியது. ஆவணப் புகைப்படக் கலைஞரும், மக்களுக்கான புகைப்படக் கலைஞர்கள் குழுமத்தின் (People”s Photographers Collective – PPC) நிறுவனருமான எம்.பழனி குமார் தலைமையில், கிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகம் (The People’s Archive of Rural India – PARI) ஆதரவுடனும், ஊரகத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கத்துடனும் (Rural Workers Development Society – RWDS) இணைந்து, இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

உழைக்கும் மக்களின் குழந்தைகளும் புகைப்படக் கலையின் மூலம் தங்கள் வாழ்க்கையைப் பதிவு செய்யும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சாயல்குடி மாணவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் புகைப்படப் பயிற்சிப் பட்டறை அளிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *