நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பாலப்பட்டி, நன்செய் இடையார், பரமத்திவேலுார், பரமத்தி, கந்தம்பாளையம், கபிலர்மலை, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, ஜேடர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
தாலுகா தலைமை மருத்துவமனையாகச் செயல்படுவதால் நாள்தோறும் 500- க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகின்றனர். 80-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.
இங்கு, விபத்து அவசர சிகிச்சை, குழந்தைகள் நலம், பல் மற்றும் சிறப்பு சிகிச்சை, எலும்பு முறிவு, கண் மருத்துவம், காசநோய், ரத்த வங்கி, பொது மருத்துவம், 24 மணி நேர தாய் சேய் நல சிகிச்சை, பச்சிலம் குழந்தை கவனிப்பு, எக்ஸ்ரே, ஸ்கேன், காது மூக்கு, தொண்டை, இ.சி.ஜி., சித்த மருத்துவம், அறுவை சிகிச்சை, குடும்பம் நலம் உள்ளிட்ட 28 பிரிவுகள் உள்ளன.
பரமத்திவேலுார் அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நாள் அதிகரித்து வருவதால் இடம் பற்றாக்குறையால் இங்கு முதலுதவி சிகிச்சை மட்டும் பெற்றுக்கொண்டு தீவிர சிகிச்சைக்கு நாமக்கல் மற்றும் கரூர் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் நிலை உள்ளது.
ஒரு சில வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். இந்நிலையில், அரசு தலைமை மருத்துவமனையை விரிவுபடுத்த கோரிக்கை எழுந்தது. கடந்த தி.மு.க ஆட்சியின்போது சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஒப்புதலின் பேரில், பொதுப்பணித்துறை சார்பில் பரமத்திவேலுார் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டும் பணி ரூ. 20 கோடி மதிப்பீட்டில் 2024, அக்டோபரில் தொடங்கப்பட்டது.
பணிகள் தொடங்கப்பட்டபோதே 2025-க்குள் கட்டடம் கட்டும் பணிகள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. தற்போது, பரமத்திவேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டிப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது.

புதிய கட்டடம் 4 தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் பொதுமக்கள் காத்திருப்பு அறை, காவல்துறை விசாரணை அறை, சி.டி. ஸ்கேன் அறை, விபத்தில் சிக்கிய நபர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் நோயாளிகள் அறையும், முதல் தளத்தில் அறுவை சிகிச்சை, ஊசி போடும் அறை, நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் கொடுக்கும் அறையும், இரண்டாவது தளத்தில் அறுவை சிகிச்சை அறை, தீவிர சிகிச்சை பிரிவும், அறுவை சிகிச்சைக்குப் பின் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்நோயாளியாக படுக்கை வசதியுடன் சிகிச்சை பெறும் வசதியும்,
நான்காவது தளத்தில் டயாலிசிஸ் வார்டு, ரத்த பரிசோதனை அறையும் மேலும் நோயாளிகள் பயன்படுத்திக்கொள்ள லிப்ட் வசதியுடன் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது கட்டடப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழா காணாமல் உள்ளது.
“விரைவில் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வாங்க” என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.