
தெய்வங்கள் நம்மைப் படைத்தவர்கள். நம்மைக் காப்பவர்கள். அப்பா ஒருவிதமாகவும் அம்மா இன்னொரு விதமாகவும் அன்பு பரிமாறுவார்கள். மாமா கொஞ்சுவார். பெரியப்பா திட்டுவார். சித்தி மடியில் வைத்து ஆராதிப்பாள். ஒவ்வொரு தெய்வமும் இப்படித்தான்! இவர்களில், ‘கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்’ சனீஸ்வரர். அதனால்தான் அவர் பெயரைச் சொன்னாலே, ‘சும்மா அதிருதில்லே’ என்று நடுங்கிப்போகிறோம்.
சனி பகவான் என்றாலே நாம் எல்லோரும் பயப்படுவோம். ‘சனீஸ்வரர் ஆட்டிப்படைக்கிறாரேப்பா’ என்று புலம்புவோம். ஆனால் சனி பகவானைக் கண்டு பயப்படவே தேவையில்லை என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். வேண்டியவர் வேண்டாதவர் என்கிற பாரபட்சமெல்லாம் நம்மிடம்தான் உண்டு. சனீஸ்வரரிடம் இப்படியெல்லாம் இல்லை. அவர், பாரபட்சமெல்லாம் பார்ப்பதில்லை. சனீஸ்வரர் என்பவர், நவக்கிரகங்களில் ஒரு கிரகம். நவக்கிரகங்களில் ஈஸ்வரப் பட்டத்துடன் இருக்கிற ஒரே கிரகம்!
நாம் என்ன செய்கிறோமோ அதற்கு உண்டான, அந்தச் செயலுக்கு உண்டான விளைவுகளைப் பலன்களாகத் தந்தருள்பவர் சனி பகவான். இந்த விஷயத்தில் சனீஸ்வரர் ஒரு நீதிபதியைப் போல் செயல்படுபவர் என்பதுதான் சரியாகப் பொருந்தும்! நாம் ஒருவிஷயத்தைச் செய்திருப்போம். அம்மா, ‘என்னடா இப்படிப் பண்ணிட்டே, சரிசரி இனிமே இப்படிச் செய்யாதே’ என்பாள். ஆனால் அப்பா, ‘ஏண்டா இப்படிச் செஞ்சே. இது சரியா? முறையா? தப்புதானே. தப்பு செஞ்சா தண்டனை அனுபவிக்கணும்தானே… அனுபவி’ என்பார்தானே..! அப்பா போல் கொஞ்சம் கறார் கடவுள்தான் சனீஸ்வரர்..
அப்படி தவறு செய்பவர்களை, சனி பகவான் பீடிக்கும் காலகட்டத்தைத்தான் ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, கண்டகச்சனி, மங்கு சனி என்றெல்லாம் சொல்கிறது ஜோதிடம். அந்த காலகட்டத்தில் சனி தோஷம் பிடித்தவர்கள் மக்களுக்கும் விலங்கினங்களுக்கும் பறவையினங்களுக்கும் நம்மாலான நன்மைகள் செய்து, இறைவனை மனமுருகப் பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், ஓரளவு பாதிப்பைக் குறைப்பார். மிகப்பெரிய கஷ்டங்களை சிறிய கஷ்டமாக்கித் தருவார். ஆனாலும் தண்டனை உண்டு. குறைந்தபட்ச தண்டனையாகத் தந்துவிட்டுத்தான் நம்மை விடுவார்!
முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் தேக்கம், வீண் அலைச்சல், தேவையில்லாத பழி, உறவுகளிடம் பகை,தொழிலில் நஷ்டம், வேலையில் இறக்கம் என்றெல்லாம் தருவார். பணிச்சுமை, சோம்பல், விளைச்சலில் நஷ்டம், தொழிலில் பின்னடைவு, உடல் உறுப்புகளில் பிரச்சினை என ஏதேனும் ஏற்படுத்திக் கொடுப்பார் சனீஸ்வரர்.
இந்தமாதிரியான தருணத்தில், நாம் சட்டென்று கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டியது சனி பகவானைத்தான்! சனீஸ்வரர் நாம் செய்த பாவங்களுக்காக நம்மைப் பிடித்துக்கொள்கிறார். நாம் செய்த பாவத்தை உணர்ந்து அவரைச் சரணடைகிறோம்.
தினமும் கைப்பிடி சாதத்தில் கொஞ்சம் எள் சேர்த்து காகத்துக்கு உணவிடுவோம். சனிக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது ஐந்து அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் எற்றி வழிபடுவது வளமும் பலமும் தரும். தேவாரப் பதிகங்கள் பாராயணம் செய்யலாம். அனுமன் சாலீசா படித்து, ஆஞ்சநேயரை வழிபடலாம். அனுமன் வழிபாடு செய்யச் செய்ய, சனி பகவானின் பாதிப்பு விலகும் என்கிறார் பாலாஜி வாத்தியார்.
மிக முக்கியமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யவேண்டும். நோயால் அல்லல்படுபவர்களுக்கும் கல்விக்கு காசில்லாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் நம்மால் முடிந்த அன்னதானம், வஸ்திர தானம், கல்விக்கு நிதி என உதவிகளைச் செய்துவந்தால், நாம் செய்கிற காரியங்களுக்குத் தடையாக இருக்காமல், காரியங்கள் அனைத்திலும் துணையாக நின்று பலம் தருவார் சனீஸ்வரர்!
சிவபெருமான் தரிசனமும், நரசிம்மர் வழிபாடும் எண்ணற்ற பலன்களைத் தரும். முக்கியமாக, ஆலயங்களில் உள்ள நவக்கிரகத்தில் சனீஸ்வர பகவானை வலம் வந்து பிரார்த்தனை செய்வோம். அருகில் உள்ள கோயிலில் அமைந்திருக்கும் நவக்கிரக சந்நிதியில் சனீஸ்வரை மனதார நினைத்து வேண்டிக்கொண்டாலே, பாதிக் கவலைகளும் துக்கங்களும் பஞ்சனெப் பறந்தோடும்!
– வி.ராம்ஜி