பழனி கோவில் நில மோசடி.. மோசடி செய்து வாங்கியது யார்? விடை கிடைக்காத 3 மர்ம கேள்விகள்! | 3 Unanswered Questions in the Palani Temple Land Scam

Spread the love

Tamilnadu

oi-Shyamsundar I

பழனி: தமிழ்நாட்டையே உலுக்கி இருக்கிறது பழனி முருகன் கோவில் மடத்திற்குச் சொந்தமான ₹100 கோடி நில மோசடி விவகாரம்.

60 ஆண்டுக்கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்டு, பக்தர்கள் வாகனங்களை நிறுத்தும் இடமாகப் பயன்படுத்தப்பட்ட 1.40 ஏக்கர் நிலம், ஒரு நாளில் தனியார் நபர்களுக்குத் தாராளமாகப் பட்டா மாறுதல் செய்யப்பட்டது எப்படி என்பதுதான் தற்போதைய பெரிய கேள்வி.

palani land case

வழக்கு இப்போது சிபிசிஐடி கைக்கு மாற்றப்பட்டுவிட்டாலும், பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் எழும் 3 பிரதான கேள்விகளுக்கு இதுவரை தெளிவான விடையில்லை.

கேள்வி 1: அதிகாரி மாற்றம் ஏன்?

இந்த வழக்கில் முதல் விசித்திரமே பத்திரப்பதிவு நடந்த விதம் தான். பழனி சார்பதிவாளர் அலுவலகத்தின் வழக்கமான அதிகாரி திடீரென விடுமுறையில் அனுப்பப்படுகிறார் அல்லது அவராகவே செல்கிறார். அதற்குப் பதிலாக, ஜூலை 6-ஆம் தேதி ஒரே ஒரு நாள் மட்டும் கூடுதல் பொறுப்பாக ஜஸ்டின் மணிகண்டன் என்ற அதிகாரி உள்ளே வருகிறார். இவரை இங்கே கூடுதல் பொறுப்பிற்கு போட்டது யார்? மாற்றியது யார்?

இந்து சமய அறநிலையத்துறை ஏற்கனவே இந்த நிலத்தைப் பதிவு செய்யக் கூடாது என 2025 மற்றும் 2026-ல் நான்கு முறை முடக்க உத்தரவுகளை அனுப்பியிருக்கிறது. முந்தைய நாள் கூட மாவட்டப் பதிவாளருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வளவு எச்சரிக்கைகள் சிஸ்டத்தில் இருக்கும்போது, ஒரே ஒரு நாள் டூட்டிக்கு வந்த அதிகாரிக்கு, இந்த ₹100 கோடி நிலத்தை மட்டும் எவ்வித தங்குதடையுமின்றி கிரயம் செய்து கொடுக்க எப்படித் துணிச்சல் வந்தது?

அந்த ஒரு நாள் டூட்டி ஆர்டரைப் பிறப்பித்த மேலிடம் எது? அந்தப் அதிகாரியைப் பகடைக் காயாகப் பயன்படுத்திய சூத்திரதாரி யார்?

கேள்வி 2: வாங்கியவன் ஏன் இன்னும் கைதாகவில்லை?

எந்தவொரு முறைகேடும் வெளிவந்தால், உடனடியாக ஒரு கீழ்மட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்வது என்பது வழக்கமான ஒரு கண் துடைப்பு நாடகமாகவே பார்க்கப்படுகிறது. இந்த வழக்கிலும் அதுதான் நடந்துள்ளது. ஆனால், பொதுமக்கள் கேட்பது நியாயமான கேள்வி:

அதிகாரியை சஸ்பெண்ட் செய்தாகிவிட்டது, சரி. ஆனால், இந்த ₹100 கோடி நிலத்தை உரிமை கொண்டாடி விற்றது யாரு? எந்தத் தைரியத்தில் அதனை இரு தனிநபர்கள் வாங்கினார்கள்? ஐந்து கடுமையான பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டும், இந்த நிமிடம் வரை அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை?

பின்னணியில் அரசியல் செல்வாக்குமிக்க புள்ளிகள் இருப்பதால்தான் காவல்துறை கைது நடவடிக்கைக்குத் தயங்கி, வழக்கைச் சிபிசிஐடிக்கு மாற்றி காலத்தைக் கடத்துகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

கேள்வி 3: பணம் எங்கிருந்து வந்தது?

தற்போது இந்த விவகாரத்தில் மனுதாரர்கள் தரப்பு நீதிமன்றத்தை நாடி, அந்தப் போலிப் பத்திரப் பதிவை முடக்கியுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக நிலம் தப்பியோடாமல் தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், குற்றவாளிகளின் பின்னணி என்ன?

வெறும் ₹2 கோடி மதிப்பில் இந்த ₹100 கோடி நிலம் கைமாறியதாகப் ஆவணங்கள் காட்டுகிறது. இந்த ₹2 கோடி பணப் பரிவர்த்தனை எங்கிருந்து வந்தது? வங்கிக் கணக்குகள் மூலமாக வந்ததா அல்லது கணக்கில் வராத கருப்புப் பணமா? 1888-ஆம் ஆண்டு மடத்து ஆவணங்களை மிகத் துல்லியமாகப் போலியாகத் தயாரித்த அந்த நில மாஃபியாக்களுக்குப் பின்னால் இருக்கும் ‘சார்’ யார்? பெரிய நபர்களின் உறவினர்களுக்கு இதில் தொடர்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன?

இந்த 3 கேள்விகளுக்கான விடைகளும், இந்த நில மோசடியின் ஆணிவேரும் சாதாரண லோக்கல் போலீஸ் விசாரணையில் சிக்காது என்பதால் தான் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சிபிசிஐடி இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்த்து, உண்மையான குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுமா அல்லது இதுவும் ஒரு பைல் மூடல் வழக்காக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *