2026-ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு கனடாவைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான ஆன் கார்சனுக்கு (Anne Carson) வழங்கப்பட்டுள்ளது. பழைய கிரீக் இலக்கியங்களையும் தொன்மங்களையும் அப்படியே மீண்டும் சொல்வதற்குப் பதிலாக, அவற்றை நவீன மனிதர்களின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளுடன் இணைத்து புதுவடிவில் படைத்த அவரது எழுத்துக்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
யார் இந்த ஏன் கார்சன்?
76 வயதான ஏன் கார்சன், கவிஞர் மட்டுமல்லாமல் கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் செவ்வியல் இலக்கிய அறிஞராகவும் அறியப்படுகிறார். பண்டைய கிரீக் இலக்கியத்தில் அவருக்குள் ஆழமான அறிவு, அவரது படைப்புகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கவிதை, உரைநடை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என வெவ்வேறு இலக்கிய வடிவங்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பது அவரது தனித்துவமான பாணியாக உள்ளது.

பழைய கதைகள்… புதிய வடிவம்!
பண்டைய கிரீக், ரோமன் இலக்கியங்களின் கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை நவீன காலத்துக்குக் கொண்டு வருவது, கார்சனின் எழுத்தின் முக்கிய அம்சம். அதில் முக்கியமானது ஆட்டோபயோகிராபி ஆஃப் ரெட் (Autobiography of Red – 1998). இது கிரீக் கவிஞர் ஸ்டீசிச்சோரஸின் துண்டுகளாகக் கிடைத்த பழைய கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கவிதை நாவல் (verse novel). ஜெரியான் என்ற சிவப்பு நிற இறக்கைகள் கொண்ட கதாபாத்திரத்தின் வழியாக காதல், அடையாளம், தனிமை போன்ற நவீன உணர்வுகளை ஏன் கார்சன் எழுதியுள்ளார்.
அவரது ஈரோஸ் தி பிட்டர்ஸ்வீட் (Eros the Bittersweet – 1986), பண்டைய கிரீக் இலக்கியத்தில் காதல் மற்றும் விருப்பத்தின் இயல்பை ஆராயும் படைப்பு. தி பியூட்டி ஆஃப் தி ஹஸ்பண்ட் (The Beauty of the Husband – 2001), திருமண உறவு மற்றும் அதன் முறிவை 29 பகுதிகளாக அமைந்த கவிதை வடிவில் பேசுகிறது. இப்படி ஒரு படைப்பை கவிதையா, கட்டுரையா, புனைகதையா என்று ஒரே வகைக்குள் அடக்க முடியாத அளவுக்கு ஏன் கார்சன் இலக்கிய வடிவங்களுடன் பரிசோதனை செய்துள்ளார்.