India
oi-Vignesh Selvaraj
அமராவதி: ஆந்திரா துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், தனது 3வது மனைவி அன்னா லெஷ்னேவாவை விவாகரத்து செய்துள்ளார். இவர்களின் 13 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாண், அரசியலில் கால் பதித்து ஜனசேனா கட்சியை நடத்தி வருகிறார். 2024 தேர்தலில் அக்கட்சி 21 சட்டசபைத் தொகுதிகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சர் ஆனார். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசில் பவன் கல்யாண் துணை முதல்வராகப் பணியாற்றி வருகிறார்.

பவன் கல்யாண்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான பவன் கல்யாண், ரசிகர்களால் பவர் ஸ்டார் என அழைக்கப்படுபவர். தெலுங்கு சினிமாவில் இருந்து பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் அரசியல் வெற்றி பெற்றவராக தற்போதைய காலகட்டத்தில் பவன் கல்யாண் இருக்கிறார்.
ரஷ்ய மாடல் அன்னா கொனிடாலாவை மணந்து அவருடன் வாழ்ந்து வந்தார் பவன். அதற்கு முன்பாக இரண்டு திருமணம் செய்துள்ளார் பவன். முதலில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு பெரிய தொழிலதிபரின் மகள் நந்தினியை திருமணம் செய்து கொண்டார் பவன். இந்த திருமணம் 1997ல் நடைபெற்றது. இதையடுத்து, சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழந்தனர்.
ஏற்கனவே 2 முறை திருமணம்
அதைத்தொடர்ந்து, நடிகையான ரேணு தேசாய் என்பவரை பவன் காதலித்து அவருடன் வாழத் தொடங்கினார் பவன் கல்யாண். இதன் காரணமாக, 2007ல் முதல் மனைவி நந்தினி விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தார். இதையடுத்து, 2008ல் விவகாரத்து உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.
இதையடுத்து 2009 ஆம் ஆண்டு பவன் கல்யாண், நடிகை ரேணு தேசாயை மணந்தார். இந்த தம்பதிக்கு ஆத்யா மற்றும் அகிரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். பவன் கல்யாணின் இந்த உறவும் 2012 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.
ரஷ்யாவை சேர்ந்த அன்னா லெஷ்னேவா
பின்னர் 2013 ஆம் ஆண்டு, மூன்றாவதாக, ரஷ்ய மாடல் அன்னா லெஷ்னேவாவை பவன் கல்யாண் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தாங்கள் பிரிய முடிவெடுத்துள்ளதாக பவன் கல்யாண் – அன்னா லெஷ்னேவா கொனிடாலா தம்பதியர் அறிவித்துள்ளனர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களது திருமண உறவு முடிவுக்கு வந்துள்ளது. இவர்களின் பிரிவுச் செய்தி பவன் கல்யாண் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரிய முடிவெடுத்துள்ளோம்
பவன் கல்யாண் கொனிடாலா மற்றும் அண்ணா லெஷ்னோவா கொனிடாலா தம்பதியினர் சார்பாக வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், “எங்கள் வாழ்வின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை ஒன்றாகக் கழித்த பிறகு, பரஸ்பர புரிதலுடனும் மரியாதையுடனும் நாங்கள் பிரிய முடிவு செய்துள்ளோம்.
எங்கள் திருமணம் முடிவுக்கு வந்திருந்தாலும், நாங்கள் நல்ல நண்பர்களாகவும், எங்கள் அருமையான குழந்தைகளுக்கு அர்ப்பணிப்புள்ள பெற்றோராகவும் தொடர்வோம். அவர்களின் மகிழ்ச்சியும் நல்வாழ்வும் எப்போதும் எங்கள் இருவரின் முன்னுரிமையாக இருக்கும்.
இந்தத் தனிப்பட்ட மாற்றத்தின் போது, உங்கள் புரிதலையும், கருணையையும், எங்கள் தனிப்பட்ட வாழ்விற்கு மதிப்பளிப்பதையும் நாடுகிறோம். இந்தப் பயணம் முழுவதும் எங்களுடன் துணை நின்ற அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளனர்.