International
-Vigneshkumar
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக அந்தப் பிராந்தியத்திற்கான உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களைப் பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுத் தடுத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் அங்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீரின் ஒரு பகுதியைப் பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது அனைவருக்கும் தெரியும். ஆனால், அங்கு வாழும் மக்களைக் கூட பாகிஸ்தான் அரசால் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அங்கு கடந்த சில வாரங்களாகப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது

போராட்டம்
அதாவது ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி என்ற அமைப்பின் தலைமையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்கள் நடந்து வருகிறது. தொடர் போராட்டங்கள், கடையடைப்புகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த போராட்டத்தை ஒடுக்கப் பாகிஸ்தான் அரசு கொடூரமான ஒரு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதாவது ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு செல்லும் அனைத்து அடிப்படை பொருட்களையும் தடுத்து நிறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அரசு இந்தத் தடையை அதிகாரப்பூர்வமாக மறுத்தாலும், சர்வதேச ஊடகங்கள் இந்த கட்டுப்பாடுகளை உறுதி செய்துள்ளன. அங்குக் கடுமையான அவல நிலை இருப்பதாகவே செய்தி வெளியிடப்பட்டுள்ளன.
பின்னணி
காஷ்மீரில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ள 12 இடங்கள் தொடர்பான சர்ச்சை உள்ளது. இந்த இடங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் அரசு தங்களுக்குச் சாதகமான அரசை ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிறுவ முயல்வதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தும் ஜேஏஏசி அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்து, அதன் ஆதரவாளர்கள் மீது கடுமையான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை சுமார் 58 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்கல
தற்போது இந்த ஆக்கிரமிப்புப் பகுதியில் தினசரி வாழ்க்கை முற்றிலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. முசாபராபாத், பூஞ்ச், ராவலகோட் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெரும்பாலான மருந்தகங்களும் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசிய மருந்துகள் கூட கிடைக்காமல் நோயாளிகளும் முதியவர்களும் தவித்து வருகின்றனர். எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால், வாகன ஓட்டிகள் பிளாக் மார்கெட்டில் பல மடங்கு அதிக விலை கொடுத்து பெட்ரோல், டீசல் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நீலம் பள்ளத்தாக்கு, பாக், ராவலகோட், ஹவேலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக ரேஷன் கோதுமை மாவு, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். உள்ளூர் சந்தைகளில் தட்டுப்பாடு நிலவுவதால், பலர் அண்டை மாகாணங்களான கைபர் பக்துன்க்வா மற்றும் இஸ்லாமாபாத் போன்ற பகுதிகளுக்குச் சென்று உணவு, மருந்து மற்றும் எரிபொருள்களை வாங்கி வர முயல்கிறார்கள்.
அத்துமீறல்
ஆனால், எல்லையில் உள்ள ஆசாத் பத்தன், பாட்டன், சாம்சியாட் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் பாகிஸ்தான் காவல்துறையினர் இவர்களைத் தடுத்து நிறுத்தி, வாங்கிய பொருட்களைத் தூக்கி எறிந்து அச்சுறுத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. லாரிகள் பல நாட்களாக எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், டன் கணக்கிலான காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அழுகி வீணாகி வருகின்றன. இதனால் பொருளாதார இழப்பும் கணிசமாக அதிகரித்துள்ளது.
அடுத்து என்ன!
பாகிஸ்தான் அதிகாரிகள் இத்தகைய தடையை அதிகாரப்பூர்வமாக மறுத்து வந்தாலும், டான் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஒரு அரசு அதிகாரி, வன்முறையின்றி போராட்டங்களைக் கட்டுப்படுத்த உணவு மற்றும் பொருட்களின் விநியோகத்தை முடக்கும் உத்தியை அரசு கையாள்வதாகக் கூறியுள்ளார். இந்த நெருக்கடியை மீறி ராவலகோட் பகுதியில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முசாபராபாத், பூஞ்ச் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் போராட்டம் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இந்த போராட்டங்கள் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.