மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி என்பவர், இந்தியக் கடற்படையில் விசாகப்பட்டினத்தைத் தளமாகக் கொண்ட கிழக்கு கடற்படையில் மாலுமியாகப் பணியாற்றி வருகின்றார். இவர் கோவை ரெட் பில்ட்ஸ் பகுதியில் உள்ள ஐ.என்.எஸ். அக்ரானியில் நடைபெறும் மேலாண்மை மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த ஒரு வாரமாக தங்கி இருந்தார். இதனிடையே பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவுத்துறை அதிகாரிக்கு, இந்திய கடற்படை ரகசிய பாதுகாப்புத் தகவல்களை பிரதீப் முகர்ஜி கசிய விட்டு இருப்பதாக ஆந்திரப் பிரதேச காவல் துறையில் பயங்கரவாதக் குழுக்கள், எல்லை தாண்டிய உளவு மற்றும் உயர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை விசாரிக்கும் கவுண்டர் இன்டெலிஜென்ஸ் சிறப்பு உளவு பிரிவு போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
மேலும், சமூக ஊடகங்களில் பாகிஸ்தானிய பெண் உளவாளியிடம் விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்துடன் தொடர்புடைய தகவல்களை பகிரந்துள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஆந்திர மாநில சி.ஐ. சிறப்பு பிரிவு போலீசார் இது குறித்த தகவல்களை தெரிவித்து, அவரை கைது செய்ய இந்திய கடற்படை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர். இதனையடுத்து ஆந்திராவில் இருந்து நேற்று காலை கோவை வந்த சிறப்பு குழு கோவை ஐ.என்.எஸ் அக்ரானியில் வைத்து, இந்திய கடற்படை மாலுமி பிரதீப் முகர்ஜியை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆந்திரா மாநிலம் விஜயவாடாவிற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.