பீகாரில் உள்ள செசன்ஸ் கோர்ட் நீதிபதி அனில் குமார், ஒரு வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய காவல்துறை அதிகாரிக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டார். ஆனால், அந்தக் காவல்துறை அதிகாரி அதைச் செய்யவில்லை. இதையடுத்து அதை நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான குற்றமாகக் கருதி, அந்த அதிகாரியை கோர்ட்டிற்கு வரவைத்த செசன்ஸ் கோர்ட் நீதிபதி, அவருக்கு தண்டனை வழங்கி அபராதமும் விதித்தார். அபராதம் விதித்ததைத் தவிர, அந்த அதிகாரியை நீதிபதி தண்டித்தார். இதை எதிர்த்து அந்தக் காவல்துறை அதிகாரி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இம்மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதில் செசன்ஸ் கோர்ட் கையாண்ட நடைமுறைகளை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட், அந்த நீதிமன்ற நீதிபதி தனது சட்ட வரம்பிற்கு உட்பட்டுத்தான் செயல்பட்டாரா என்று கேள்வி எழுப்பியது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரைத் தனது நீதிமன்றத்திற்கு வரவழைக்கவும், அவர்கள் நேரில் ஆஜராகத் தவறியதை நீதிமன்றத்தின் முன்பு இழைக்கப்பட்ட குற்றம் எனக் கருதி, அதே நாளில் அந்த உயர் அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கவும் அவருக்கு அதிகாரம் உள்ளதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
நீதிபதி “ராபின் ஹூட்” அல்லது “பாகுபலி” போல் செயல்படக் கூடாது என்று எச்சரித்த நீதிபதிகள், ஒரு நீதிபதி தனது அதிகார வரம்புகளை அறிந்திருக்க வேண்டும் என்று அவருக்கு நினைவூட்டினர். மேலும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யத் தவறியதற்காக காவல்துறைக் கண்காணிப்பாளரை (எஸ்பி) தண்டித்த நீதிபதியின் செயல் வருந்தத்தக்கது என்று தெரிவித்தனர்.
நீதிபதி சூர்ய காந்த் மற்றும் ஜோய்மல்யா பாக்சி விசாரணையின் போது தெரிவித்த கருத்தில், “சாகசம் செய்தது போதும். தேசிய நீதித்துறை அகாடமிக்குச் சென்று பயிற்சி பெறுங்கள். நீங்கள் ராபின் ஹூட் ஆக வேண்டியதில்லை. நீங்கள் ஒரு பாகுபலி ஆக விரும்புகிறீர்களா? நீதிபதியாக உங்கள் வரம்புகளையும் அதிகார வரம்புகளையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சட்டத்தைப் பற்றிய உங்கள் புரிதல் உண்மையிலேயே, ஆழ்ந்த ஏமாற்றமளிக்கிறது”‘ என்று தெரிவித்தனர்.