
திமுக-பாஜக மறைமுக கூட்டணியில் இருப்பதாக தவெக அரசு தொடர்ந்து குற்றச்சாட்டி வந்த நிலையில் தற்போது அமைச்சர் நிர்மல் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், திமுக – பாஜக இடையேயான அரசியல் தொடர்பு குறித்து பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் கூறுகையில், “பாஜகவுடன் திமுக தற்போது நேரடிக் கூட்டணி வைத்துள்ளது. அரசியலில் நிரந்தர எதிரி இல்லை என கனிமொழி சோமுவும், வானதி சீனிவாசனும் கூறியதை தொடர்பு படுத்தியும், திருச்சி சிவா மத்திய அமைச்சராக இருப்பார் என கூறப்பட்டதை திமுக தரப்பில் இருந்து யாரும் மறுக்கவில்லை என்றும், இவைகளை வைத்து பார்க்கும் போது திமுக, பாஜகவுடன் நேரடிக் கூட்டணி வைத்திருப்பது நிரூபணமாகியுள்ளது” என்றார்.
மேலும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றது குறித்து “இருக்கை மாற்றத்துக்காக தேநீர் விருந்தில் பங்கேற்றேன் என கனிமொழி கூறுவது நம்பும்படியாக இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தொகுதி மறுவரையறைக்கு எதிராக வாக்களிப்போம் என திமுக இதுவரை ஒரு வார்த்தைகூட கூறாமல் மௌனம் காப்பதும், டெல்லியில் யாருடன் பேசினாலும் அது மக்கள் நலனுக்காக இருக்கும் என மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாகவும் நிர்மல்குமார் குறிப்பிட்டார்.
இதனிடையே, காவிரி நதி நீர் உரிமை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவித்த அமைச்சர், தமிழகத்தின் காவிரி உரிமையை காக்கவும், தமிழகத்துக்கு தேவையான தண்ணீரைப் பெறவும் அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும், தமிழகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஊடகங்களை அழைக்காததற்கு இடப்பற்றாக்குறையே காரணம் என்றும் அவர் விளக்கம் அளித்தார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.