“நீரிழிவு என்பது ரத்தச் சர்க்கரை அளவு மட்டுமல்ல!”
நாளமில்ல சுரப்பியல் மற்றும் நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் பிரசாத் ராவ், நீரிழிவு நோயின் தன்மை மற்றும் அதன் நீண்டகால தாக்கம் குறித்துப் பேசினார்.
முதல் வகை நீரிழிவு நோயில் (Type 1 Diabetes) உடலில் இன்சுலின் உற்பத்தியில் முழுமையான பிரச்சனை இருக்கும் நிலையில், இரண்டாம் வகை நீரிழிவு நோயில் (Type 2 Diabetes) இன்சுலின் எதிர்ப்புத் திறன் (Insulin Resistance) முக்கிய காரணியாகச் செயல்படுகிறது என்று விளக்கினார். அதிக சிறுநீர் கழித்தல், தீவிர தாகம், காரணமில்லாத உடல் எடை குறைதல், பார்வை மங்குதல் மற்றும் காயங்கள் தாமதமாக ஆறுதல் போன்றவை கவனிக்க வேண்டிய ஆரம்ப அறிகுறிகள் என்றார்.
“நீரிழிவு என்பது ரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருப்பது என்ற ஒரு எல்லைக்குள் மட்டும் நின்றுவிடுவதில்லை. இதயம், மூளை, கண்கள், சிறுநீரகம், நரம்புகள் என உடலின் பல முக்கிய உறுப்புகளையும் (Vital Organs) பாதிக்கக்கூடியது. அதனால் சர்க்கரை அளவை மட்டுமல்ல, உடலின் மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் தொடர்ந்து கண்காணிப்பது அவசியமாகிறது,” என்றார் அவர். வயது, மரபியல் (Genetics), உடல் பருமன் (Obesity) மற்றும் நவீன வாழ்க்கை முறை (Lifestyle) ஆகியவையும் நீரிழிவு அபாயத்துடன் நேரடித் தொடர்புடையவை எனக் குறிப்பிட்டார்.

சிறுநீரகப் பரிசோதனைகளும் அதன் அவசியமும்
நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரக ஆரோக்கியம் குறித்துப் பேசிய சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் ஜெயனிவாஷ், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
ரத்தத்தில் யூரியா (Urea) மற்றும் கிரியேட்டினின் (Creatinine) அளவுகள் சாதாரண வரம்பிற்குள் இருக்கின்றன என்பதற்காக மட்டும் சிறுநீரகம் முழுமையாக ஆரோக்கியமாக இருக்கிறது என்று முடிவு செய்துவிட முடியாது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீரகத்தின் ஆரம்பநிலை பாதிப்புகளைத் துல்லியமாகக் கண்டறிய மைக்ரோஅல்புமின்யூரியா (Microalbuminuria) போன்ற பிரத்யேகப் பரிசோதனைகள் அவசியமானவை. எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான சிறுநீரகப் பரிசோதனைகளைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என்றார்.