உதவி செய்வது என்பது அவளுக்கு அன்றாட நிகழ்வு. சுவாசத்தைப் போன்றது.
தன் அனுபவப் பாடங்களை ஊருக்கு மட்டுமல்ல உற்றோரின் வாழ்விற்கும் உரமாக்கினாள் அந்த தேவதை.
தைரியத்தின் மறுபெயர். காலனுக்கான காலம் வந்த போது கூட அவள் கலங்கி நிற்கவில்லை. “பொறந்தவங்க எல்லாரும் ஒரு நாள் போகத் தானே வேண்டும்!”, என்று தெளிவாகச் சொல்வாள். ‘பயம்’ என்ற சொல்லை அவள் தன் அகராதியிலிருந்து நீக்கி பல காலம் ஆகியிருந்தது.
நேர்மறை எண்ணங்கள் மற்றுமே ஊற்றெடுக்கும். எது வந்தாலும், கமலஹாசனின் இன்றைய வசனத்தை அன்றே உச்சரித்தவள் எங்கள் வீட்டுத் தாய்க்கிழவி… “பாத்துக்கலாம்!”
“அச்சச்சோ… இப்படி ஆயிடுமோ?”, “நாளைக்கு இப்படி நடந்தா என்ன பண்றது?!”, “நம்ம வாழ்க்க முடிஞ்சு போச்சா?”, “நமக்குன்னே ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோ?!”, “எல்லாம் விதி” – என்ற எந்த ஒரு சராசரி பெண்ணின் புலம்பலும் அவள் சொல்லி நான் கேட்டதில்லை!
“வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். தைரியத்தை மட்டும் இழக்கக் கூடாது!” என்ற அவளின் அறிவுரை என்றும் ஏற்புடையது.
ஊக்கமளிக்கும் தன்முனைப்பு பேச்சாளர்கள் பேசும் ஆயிரம் வசனங்களை விட இந்த ஒற்றை வரி வலியது என்பேன். தன்னம்பிக்கையின் ஊற்று – என் தாய்க் கிழவி!
தெளிந்த முடிவுகள், தீர்க்கமான சிந்தனை, அயராத உழைப்பு இவை அவளின் அடையாளங்கள்.
நான் இதுவரை கூறியதை வைத்து அவள் கராரான பேர்வழி போலும் என்று நீங்கள் யூகித்திருந்தால்… அது தான் இல்லை! தாய்க்கிழவி ராதிகாவைப் போல் இவளுக்கும் வியக்கத்தக்க மறுபக்கம் உண்டு!
அன்பையும் பாசத்தையும் அவள் வழியில் காட்டிக்கொண்டே இருப்பாள்! அக்கறை எனும் மொழியிலும்.
பேரன் பேத்தியரை பிறர் முன்பு எப்போதும் உயர்த்திப் பேசி ஊக்கமளிப்பாள். “என் பேத்தி அப்பிடி சமைப்பா. பிரமாதமா படிப்பா. பேரன் எப்பயும் பஃஸ்ட் மார்க்”, என்று புகழ்வதில் சிக்கனமே காட்ட மாட்டாள்.
“அப்பத்தா உனக்கு வேங்கரிசி மாவு ரெடி பண்ணி வச்சுருக்கேன். சாப்புடு” என்று ஊரிலிருந்து வந்ததும் ஊட்டி விடுவாள். கனிவையும் கண்டிப்பையும் சரி விகிதத்தில் பரிமாறுவாள்.
அவளின் 60+ வயதினில் சர்க்கரை நோயும் இரத்தக் கொதிப்பும் வந்து விட்டது.
இன்சுலின் தினமும் போடும் அளவிற்கு! அதை நான் கற்றுக்கொண்டு வீட்டிலேயே ஊசி போட்டு விடுவேன். “என் பேத்தி போட்டு விட்டா போட்டதே தெரியல. வலியே இல்ல.
அந்த நர்ஸ் அம்மா கடாமாட்டுக்கு குத்தற மாதிரி குத்துறா!” என்பாள். (அதைக்கேட்டதும் பத்தாங்கிளாஸ் படித்த எனக்கு எப்படி குளுகுளு என்றிருந்திருக்கும்!)
இரத்தப் பரிசோதனை ரிசல்ட்டினை வாங்கி வந்து படித்துக் காட்டுவேன்.
“அப்பத்தா!! சுகர் +++, பி.பி.யும் ஜாஸ்தியா இருக்கு. என்ன பண்ணீங்க?!”, என்று கேட்டால்…மெதுவாக வார்த்தைகளை முழுங்கிக்கொண்டே சொல்வாள்…”இல்ல. நேத்து பங்காளி வீட்டுல கல்யாணம். ஆத்தங்குடி பெருமாள் சமையல். நல்லா இருந்துச்சேன்னு…
ரெண்டே ரெண்டு வெள்ளப் பணியாரம், 2 வட, மூனே மூனு கந்தரப்பம்…அவ்ளோ தான் சாப்டேன்” என்று குழைவாள்.
இங்கே…தாய்க் கிழவி படத்தில் ராதிகா மதுரை சென்று ஜிகர்தண்டா ருசித்த காட்சி ஞாபகம் வருகிறதா?
எங்கள் தாய்க் கிழவி பல சமயங்களில் இப்படி குழந்தையாய் மாறிவிடுவதும் உண்டு!!
இதை விட வேடிக்கை ஒன்று. எங்களுக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து எங்கள் அப்பத்தா ‘முதல் மரியாதை’ ராதா தான்… ரவிக்கை அணிவதில்லை.
அவளின் 65 ஆவது வயதில், என் மூத்த அத்தையின் மகன், அப்பத்தாவின் மூத்த பேரன், தன் நண்பர்களுடன் வீட்டிற்கு வந்திருந்தார்கள். நண்பர்கள் அப்போது கேலி செய்த காரணத்தால், அப்பத்தாவிற்கு புதிதாக ரவிக்கை துணி எடுத்துக் கொடுத்து தைத்து அணிய வற்புருத்தினார்கள்.
இதுவரை ரவிக்கை அணியாத, இத்தனை வருடங்களாக அதற்காக
ஒருமுறை கூட கூச்சப்படாத என் அப்பத்தா…முதன் முறை ரவிக்கை அணிந்த போது(!) வெட்கி நின்ற அழகை சொல்லி மாளாது! அவள் அன்று தவித்த தவிப்பைக் கண்டு எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை!
வீட்டிற்கு யார் வந்தாலும்… அது வீதியில் கூவி விற்கும் வியாபாரியாய் இருந்தாலும் சரி, நண்பர்களாய் இருந்தாலும் சரி, விருந்தாளி ஆனாலும் சரி… காபியோ, மோரோ, உணவோ ஏதோ ஒன்று நிச்சயம் பரிமாறப்படும்.
ஏப்ரல், மே மாதங்களில் என் அப்பத்தா வீட்டு வாசலில் தண்ணீர்ப் பந்தல் அல்லது நீர் மோர் பந்தல் இல்லாத வருடமே கிடையாது! (ம்ம்ம்…’திருவருட்செல்வர்’ திரைப்படத்தில் வரும் ‘நாவுக்கரசர் நீர் மோர்ப் பந்தல் நினைவிற்கு வருகிறதா?)
முழுப் பரிட்சையை முடித்து விட்டு மொட்டை வெயிலில் வீடு திரும்பும் பள்ளி மாணாக்கர்கள், எங்கள் வீட்டுப் பந்தலில் நின்று, அருந்தி, மகிழ்ந்து விட்டுச் செல்வது வாடிக்கை.
இப்படி ஈகையின் இலக்கணமாயும் அவள்..!
“ஒற்றை ஆளாய் என்ன செய்து விடுவாள்?” என்று கேட்ட ஊருக்கு, “என்னால் என்ன செய்ய முடியாது?” என்று வாழ்ந்து காட்டியவள்… எங்கள் வீட்டுத் தாய்க் கிழவி… என் அப்பத்தா!
அவளின்
சுருங்கிய தோல் தந்த சுகமும்
நெருங்கிய போது கிடைத்த அரவணைப்பும்
வருந்திய போது தந்த ஊக்கமும்
பொருந்தி இருந்த அவளுடனான எங்கள் வாழ்வும்
இன்று நினைத்தாலும் இனிக்கும்!
– அலமேலு இராமநாதன்,
கெருகம்பாக்கம்,