
ஜார்க்கண்டின் கிரிடிஹ் மாவட்டத்தில் உள்ள பஜ்டோ கிராமத்தில், சாலையோரக் கடையில் பானிபூரி சாப்பிட்ட 18 குழந்தைகள் உட்பட 20 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இவர்களில் 18 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 6 வயது குழந்தை கிசிச்சை பலனின்றி உயிரிழ்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து துணை ஆணையர் ராம்நிவாஸ் யாதவ் கூறுகையில், கெட்டுப்போன உணவு மற்றும் சாத்தியமான கலப்படம் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது தண்ணீர் மாதிரிகள் பரிசோதனையில் உள்ளன. ஏற்கனவே வெப்பம் தொடர்பான வயிற்றுப்போக்கு பாதிப்புகளால் அவதிப்பட்டு வரும் கிராமத்தில் அச்சம் நிலவுவதால், அதிகாரிகள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கடைக்குச் சீல் வைத்து, உணவு மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். 6 வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.