வளர்ந்து வரும் இந்த நவீன யுகத்தில் ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு நினைத்துப் பார்க்காதவற்றையும் நிகழ்த்திக் காட்டி வருகிறது.
தற்போது மீண்டும் அதை நிரூபிக்கும் வகையில் இத்தாலிய நாட்டு பாம்பே நகரில் கிபி 79-ல் மவுண்டு வெசுவியஸ் எரிமலை வெடித்தபோது எரிமலையிலிருந்து வெளியான எரிமலை குழம்புகளில் சிக்கி உயிரிழந்த பலருடைய எச்சங்கள் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டன.
இரண்டு ஆண்களின் எலும்புக்கூடுகள் போர்ட்டா ஸ்டேபியா நெக்ரோ போலிஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. அப்போது கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் இறுதி வாழ்க்கை நிகழ்வுகளை ஏஐ தொழில்நுட்பம் மூலம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மீட்டுருவாக்கம் செய்திருக்கின்றனர்.

இதில் ஒரு நபர் தன்னுடைய தலையில் “டெரகோட்டா மோர்டார்’ என்ற பெரிய மண் பாத்திரத்தை கவசமாக பயன்படுத்தியதையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எலும்புக்கூட்டின் அளவீடு, தொல்பொருள் தரவுகள் மற்றும் புகைப்பட எடிட்டிங் நுட்பங்களைச் சேர்த்து பயன்படுத்தி ஏஐ மூலம் மனித உருவமாக வடிவம் கொடுத்துள்ளனர். எலும்புக்கூட்டை வெறும் எலும்புக்கூடாக மட்டும் பார்க்காமல், எரிமலை வெடித்தபோது அருகில் இருந்த மனிதர் எப்படி உணர்ந்திருப்பார், என்ன வகையான மனநிலையில் இருந்திருப்பார் என்பதையெல்லாம் ஒரு காட்சியாக வடிவமைத்து ஏஐ உருவாக்கியுள்ளது.