காதல் டூயட் பாடல்களில் வெள்ளை உடை தேவதைகள் இடம் பெற்றதும் இவரது கற்பனையின் விளைவே. அது பல காலம் வரை தமிழ்த் திரையுலகை ஆட்டிப்படைத்தது. ஆர் வரிசைக் கதாநாயகிகள் பாரதிராஜாவின் மற்றொரு கொடை. ராதிகா, ரதி, ராதா, ரேகா போன்றோர் பாரதிராஜாவின் அறிமுகத்தில் திரைக்கு வந்து தமிழ்நாட்டில் பல தசாப்தங்களுக்கு நிலை பெற்றவர்கள். கமல்ஹாசனும் 16 வயதினிலே தொடங்கி, சிகப்பு ரோஜாக்கள், டிக்…டிக்.. டிக், ஒரு கைதியின் டைரி என்று நான்கு திரைப்படங்களில் இயக்குநருடன் தொடர்ந்தார். அனைத்துமே குறிப்பிடத்தக்க வெற்றித் திரைப்படங்கள்.
நடிகை ரேவதி மண் வாசனை தொடங்கி புதுமைப் பெண், ஒரு கைதியின் டைரி ஆகிய திரைப்படங்களில் முத்திரை பதித்தார். நடிகை இராதா அலைகள் ஓய்வதில்லையில் தொடங்கி காதல் ஓவியம், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை என்று நடிப்பதற்கு வாய்ப்புள்ள பல படங்களில் தொடர்ந்தார்.

முதல் மரியாதையும், கடலோரக் கவிதைகளும் இயக்குநரின் திரைக்கவிதைகள் என அறுதியிட்டுக் கூறலாம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத காவியங்கள் அவை. வேதம் புதிது ஒரு மாற்றுப் பரிமாணத்தில் வந்த திரைப்படம். என்னைக் கேட்டால் இயக்குநரின் படங்களை வைத்து பல முனைவர் பட்ட ஆய்வுகள் கூட செய்யலாம்.
என் உயிர்த் தோழன் அரசியலில் அடிமட்டத் தொண்டர்கள் ஏமாற்றப்படும் விதத்தை அழகாகத் தந்த திரைக்காவியம். தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த பாபு என்ற அற்புதமான திரைக்கலைஞனை அறிமுகப்படுத்தியிருந்தார். பாவம் பாபு மற்றொரு திரைப்படத்தில் நடித்த போது ஏற்பட்ட விபத்தில் அவர் நடைப்பிணமாக வாழ்ந்து மடிந்தார். என் உயிர்த்தோழனின் ஏ… இராசாத்தி பூச்சூடி வா.. வா. வா என்ற பாடல் இப்பொழுதும் டிரெண்டிங்கில் இருந்ததை அனைவரும் அறிந்திருப்போம்.
நாடோடித் தென்றலும் கருத்தம்மாவும் கூட இயக்குநரின் பிந்தைய கால காவியங்கள் தான். இயக்குநர் பாரதிராஜாவின் திரைப்படங்கள் நான் இக்கட்டுரையில் கூறிய திரைப்படங்கள் அனைத்துமே என் மனதிற்கு நெருக்கமானவை. உயிரோடு உறவாடிய திரைக்கதைகள், கதாபாத்திரங்கள், இசை, பாடல்கள் என இன்னும் உயிர்ப்புள்ள படைப்புகள் அவை.
புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களை வைத்து இயக்குநர் இயக்கிய தமிழ் செல்வன் மற்றுமொரு சிறந்த படம். இயக்குநரின் அந்தி மந்தாரை படத்தை நான் இன்று வரை பார்க்கவில்லை. நிச்சயம் பார்க்க வேண்டும். தமிழ் செல்வனுக்குப் பிறகு அவர் தனது மகன் மனோஜை கதாநாயகனாக அறிமுகப்படுத்த இயக்கிய தாஜ்மஹால் திரைப்படத்தை கொஞ்சம் கொஞ்சமாக தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன்.
தமிழ்த்திரையுலகின் போக்கினை தடம் மாற்றிய ஒரு இயக்குநர். திரையரங்கக் கூடங்களின் தளங்களுக்குள் முடங்கிக்கிடந்த ஒளிப்படக்கருவியை மக்கள் வாழ்வியலோடு இணைக்க தான் வாழ்ந்த கிராமங்களுக்கே கொண்டு சேர்த்த பெருமை மிகு படைப்பாளி, இரசனை மிக்க இயக்குநரின் மறைவு மீளாத்துயரம். அவரது படைப்புகள் இன்னும் நீண்ட காலம் வாழும்.
மகாலிங்கம் இரெத்தினவேலு,
விரிவுரையாளர்,
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,
பாலையம்பட்டி, விருதுநகர் மாவட்டம்.