வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
தமிழ்ச் சினிமாவின் இலக்கணத்தை, ஸ்டுடியோக்களின் நான்கு சுவர்களுக்குள் இருந்து மீட்டெடுத்து வயல்வெளிகளிலும்,பொட்டல்காடுகளிலும் புடம் போட்டு திரைச்சீலைகளில் சேற்றையும்,சகதிகளையும் பூசி சினிமாவை,கிராமத்து மண்வாசனைக்கு மாற்றிய மாயாஜாலத்திற்கு சொந்தக்காரர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
பாரதிராஜா வெறும் இயக்குனர் மட்டும் அல்ல.அவர் கேமராவால் கிராமத்தின் கவிதைகளை எழுதியவர்.80 -களில் தமிழ் சினிமா நகர்ப்புறத்து வன்முறைகளிலும், செயற்கையான நாடகத் தனங்களிலும் மூழ்கியிருந்தபோது, திரையரங்கிற்குள் கிராமத்து மண்ணின் வாசனையையும், ஈரப்பதத்தையும் கொண்டு வந்த மாயாஜாலக்காரர்.
மரம்,செடி,கொடி,ஓடும் ஆறு, பெய்யும் மழை என அனைத்தையும் வெறும் பின்னணியாகப் பயன்படுத்தாமல்,கதையின் முக்கியக் கதாபாத்திரங்களாகவே மாற்றியவர்.பாரதிராஜாவின் படங்களில் “சிவப்பு’ நிறத்திற்கு எப்போதும் ஒரு முக்கியத்துவம் இருக்கும். அது காதலின் தீவிரத்தையோ அல்லது ஆபத்தின் அறிகுறியையோ காட்டும் ஒரு மாயாஜாலக் குறியீடாக அவரின் படங்களில் இருக்கும்.

திரையுலகிற்கு அவர் அறிமுகப்படுத்திய ராதிகா, ராதா,ரேவதி,ரஞ்சனி என “ஆர்” எழுத்து நாயகிகள் மற்றும் கார்த்திக்,நிழல்கள் ரவி போன்ற நடிகர்கள் இன்று வரை தமிழ்த் திரையுலகின் அடையாளங்களாக விளங்குவதற்கு பாரதிராஜாவின் அவதானிப்புத் திறமையும்,அந்த மந்திரப் பார்வைதான் காரணம்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் வந்த பல காட்சிகள் ரசிகர்களின் நெஞ்சில் கல்வெட்டாய் பதிந்தவை.’16 வயதினிலே’ – படத்தின் இறுதிக் காட்சியில், பரட்டை மயிலை வன்புணர்வு செய்ய முயலும்போது, அதுவரை கோழையாக இருந்த சப்பாணி ஒரு பெரிய கல்லைத் தூக்கிக் கொண்டு ஓடிவரும் காட்சியும், இறுதியில் “என் மயிலு கைல ஒருத்தன் கை வச்சுட்டான்ல…” என்று உருகும் இடமும் தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட உணர்ச்சிப் பிழம்பு.
நடோடித் தென்றல் படத்தில் தன் முறைப்பெண்ணான ரஞ்சிதாவை மூக்குக் குத்த கூட்டி வரும் பாண்டியனிடம் நெப்போலியனும்,ரஞ்சிதாவிடம் கார்த்திக் செய்யும் பயமுறுத்தும் சேட்டைகளும் நிறைந்த காட்சிகளில் தியேட்டர் கரவொலியிலும்,சிரிப்பொலியிலும் அதிரும்.