பாராகிளைடர் மீது மோதிய விமானம் – அவசர பாராசூட் மூலம் உயிர் தப்பிய பெண்; பதறவைக்கும் வீடியோ | sabrina paraglider plane collision austrian alps survival video

Spread the love

ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைத்தொடரில் வானில் பறந்து கொண்டிருந்த பாராகிளைடர் மீது சிறிய ரக விமானம் ஒன்று மோதிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில், பாராகிளைடரின் இறக்கை கிழிந்து சுழன்று கீழே விழுந்தபோதும், சமயோசிதமாக செயல்பட்ட பெண் தனது அவசர கால பாராசூட்டைப் பயன்படுத்தி காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த பதறவைக்கும் தருணங்கள் அவர் பொருத்தியிருந்த கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த சனிக்கிழமை மதியம், வடக்கு ஆஸ்திரியாவில் பாராகிளைடிங் செய்வதற்கு பிரபலமான இடமான ஷ்மிட்டன்ஹோஹே மலைக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சப்ரினா (44) என்ற அனுபவம் வாய்ந்த பாராகிளைடர், தனது உடையில் கேமராவைப் பொருத்தியபடி வானில் பறந்து கொண்டிருந்தார். அப்போது, சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று, எதிர்பாராதவிதமாக சப்ரினாவின் தலைக்கு சில அடிகள் மேலே, அவரது பாராகிளைடரின் மீது நேராக மோதியுள்ளது.

சப்ரினா பதிவு செய்த கோணத்தில் (first-person footage) எடுக்கப்பட்ட அந்த காணொளியில், விமானம் மோதியவுடன் பாராகிளைடரின் இறக்கைப் பகுதி இரண்டாகக் கிழிவது தெளிவாகத் தெரிகிறது. அடுத்த கணமே கட்டுப்பாட்டை இழந்த அவர், அலறியபடி அதிவேகமாக சுழன்று தரையை நோக்கி விழத் தொடங்கினார். பிரதான பாராசூட் முற்றிலும் சேதமடைந்த நிலையில், சிறிதும் தாமதிக்காமல் தனது அவசர கால பாராசூட்டை இயக்கி, பத்திரமாக தரையிறங்கினார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆஸ்திரிய காவல்துறை, ஹெலிகாப்டர் மூலம் அவரை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்காக உள்ளூர் விமான நிலையத்திற்கு கொண்டு சென்றது. “மோட்டார் விமானத்தின் புரோபெல்லர் (propeller) பாராகிளைடரை கடுமையாக சேதப்படுத்தியது. இதனால், அனுபவம் வாய்ந்த அந்த பாராகிளைடர் தனது அவசர கால பாராசூட்டை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என சால்ஸ்பர்க் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *