பாராசிட்டமால் முதல் ஆன்டிபயாடிக் வரை… உயிருக்கே ஆபத்தான 159 மருந்துகள்..! – Kumudam

Spread the love

உலகம் முழுவதும் கொரோனா பரவிய காலத்தில் மருந்துகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால், தொற்று பரவல் கட்டுக்குள் வந்த பிறகும் அந்த நடைமுறை தொடர்வது குறித்து மருந்தக உரிமையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதும், தரமற்ற மருந்துகள் சந்தையில் பரவுவதும் நோயாளிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனையடுத்து கடந்த மே மாதத்தில் நாடு முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்தகங்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

இதற்கிடையில், சந்தையில் விற்பனையாகும் மருந்துகளின் தரத்தை கண்காணிக்கும் நடவடிக்கையாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), மாநில மருந்து பரிசோதனை பிரிவுகளுடன் இணைந்து விரிவான ஆய்வை மேற்கொண்டது. கடந்த மே மாதத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் மொத்தம் 159 மருந்து மாதிரிகள் தரநிலைக்கு ஒவ்வாதவை என கண்டறியப்பட்டுள்ளன. இதில் 113 மாதிரிகள் மாநில ஆய்வகங்களிலும், 46 மாதிரிகள் மத்திய ஆய்வகங்களிலும் தோல்வியடைந்தன.

தரமற்றதாக கண்டறியப்பட்ட பட்டியலில் பாராசிட்டமால், ஆன்டிபயாடிக் மருந்துகள், நீரிழிவு நோய்க்கான மாத்திரைகள், இருமல் மருந்துகள் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் போன்ற அத்தியாவசிய மருந்துகளின் குறிப்பிட்ட உற்பத்திப் பேட்சுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், அசாம் மாநிலத்தில் போலி மருந்து ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில், இந்த ஆய்வில் சிக்கியது குறிப்பிட்ட உற்பத்திப் பேட்சுகள் மட்டுமே என்பதால், சந்தையில் கிடைக்கும் அனைத்து மருந்துகளும் தரமற்றவை என்ற அச்சம் தேவையில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மருந்துகளை வாங்கும் முன் அவற்றின் காலாவதி தேதி மற்றும் உற்பத்தி விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போலி மருந்து விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில், அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் மருந்துப் பொருட்களில் QR குறியீடு அச்சிடும் நடைமுறையும் அமலுக்கு வர உள்ளது. முதற்கட்டமாக புற்றுநோய் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் மருந்து தயாரிப்பு நிறுவனம், பேட்ச் எண் உள்ளிட்ட முக்கிய விவரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும். இந்த நடவடிக்கை போலி மற்றும் தரமற்ற மருந்துகளின் புழக்கத்தை கணிசமாக குறைக்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *