டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், பிரதமருக்கு எதிராக அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக நொய்டாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி மீது காவல்துறை “ஜீரோ எஃப்.ஐ.ஆர்’ பதிவு செய்தது.
இதன் பின்னர், அச்சிறுமி உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு பேசிவிட்டதாகக் கூறி மன்னிப்புத் கேட்கும் வீடியோவை வெளியிட்டார். ஆனால், சிறுமி மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, “பேச்சு சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தல்” எனப் பல்வேறு எதிர்ப்புகளைக் கிளப்பியது.
அதேநேரம் டெல்லி போராட்டத்துக்குப் பிறகு Gen Z தலைமுறை இளைஞர்களைச் சென்றடைவதற்காக, பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் தொடர் காணொளிகளை வெளியிட்டு வருகிறார். இந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார்.

நேற்று அவர் வெளியிட்ட வீடியோவில், போராட்டத்தின்போது சிலர் தன்னையும் தனது மறைந்த தாயாரையும் மிகக் கடுமையாக அவதூறாகப் பேசியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், தவறு செய்த இளைஞர்களைத் தண்டிப்பதோ அல்லது நீதிமன்றத்திற்கு இழுப்பதோ தீர்வாகாது என்றும், அவர்களைத் தான் மன்னித்து வழிநடத்த விரும்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.