தமிழ்நாட்டில் ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலைகள் 68% வரை அதிகம் ஆகும். ஆவினில் 3 சதவீதம் கொழுப்பு சத்துள்ள நீல உறை பால் லிட்டருக்கு ரூ. 40-க்கு விற்கப்படும் நிலையில், தனியார் நிறுவனங்கள் ரூ. 24 கூடுதலாக விற்பனை செய்கின்றன. அதேபோல், பச்சை உறை பால் ஆவினில் ரூ. 44-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தனியார் பால் விலை, ரூ. 30 கூடுதலாக ரூ. 74-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 6 சதவீதம் கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு உறை ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 60 மட்டும் தான். ஆனால், அதே பாலை தனியார் நிறுவனங்கள் ரூ. 84-க்கு விற்பனை செய்கின்றன. தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஆவின் பால் விலை மிகவும் குறைவாக இருப்பதால், அது ஏழை& நடுத்தர மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டால், அது அதிகபட்சமாக 12.50% உயர்வாக இருக்கும்.
அதை சாதாரண மக்களால் தாங்க முடியாது. அதிலும் குறிப்பாக அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஆவின் பாலின் விலையும் உயர்த்தப்பட்டால், அது மக்களை கடுமையாக பாதிக்கும். அதே நேரத்தில் ஆவின் தொடர்ந்து இழப்பில் இயங்கினால், அது முடங்கி விடாதா? என்ற வினாவும் எழலாம்.
மக்களுக்கு மலிவு விலையில் பால் வழங்கினாலும், ஆவின் நிறுவனம் இலாபத்தில் இயங்குவதை இரு வழிகளில் உறுதி செய்ய முடியும். கடந்த ஆண்டில் ஆவின் நிறுவனத்தின் மாநில அலகு ரூ. 120 கோடி இழப்பை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் மொத்தமுள்ள 27 மாவட்ட அலகுகளில் 7 அலகுகள் ரூ.23 கோடி இழப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், மீதமுள்ள 20 மாவட்ட அலகுகள் 53.20 கோடி இலாபம் ஈட்டியுள்ளன. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களைப் போலவே ஆவின் நிர்வாகத்திலும் ஊழல் மற்றும் நிர்வாகத் திறன் இன்மை தலைவிரித்தாடுகிறது. அவற்றை சரி செய்வதன் மூலம் அனைத்து மாவட்ட அலகுகளையும் இலாபத்தில் இயங்கச் செய்ய முடியும்; மாநில அலகின் இழப்பையும் பெருமளவில் குறைக்க முடியும்.

மலிவு விலையில் பால் வழங்குவதால் மாநில அலகின் இழப்பை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாது. அதேநேரத்தில் பால் விற்பனையில் ஏற்படும் இழப்பை அரசே ஏற்றுக்கொள்வதன் மூலம் ஆவினை இலாபத்தில் இயக்க முடியும். தமிழ்நாட்டில் விவசாய மின் இணைப்புகளுக்கு முழுமையாகவும், வீடுகளுக்கு 100 யூனிட் முதல் 200 யூனிட் வரையிலும் இலவச மின்சாரம் வழங்கப்படுவதால் மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய, கடந்த ஆண்டில் மட்டும் தமிழக அரசு ரூ.33,478 கோடி மானியம் வழங்கியுள்ளது. அதேபோல், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.17,000 கோடி மானியம் வழங்கப்படுகிறது. விடியல் பயணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் நடப்பாண்டில் இந்த மானியம் இன்னும் அதிகரிக்கக் கூடும். மின்சாரம், போக்குவரத்து ஆகியவை மக்களுக்கு அடிப்படைத் தேவை என்ற அடிப்படையில் தான் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் ஒப்பிடும் போது பால் என்பது இன்னும் பல மடங்கு முக்கியமான அடிப்படைத் தேவை ஆகும். அதைக் கருத்தில் கொண்டு ஆவின் நிறுவனத்திற்கும் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும். பால் விலையை உயர்த்த வேண்டும் என்ற ஆவின் நிறுவன பரிந்துரையை ஏற்கக் கூடாது” என்று வலியுறுத்தியிருக்கிறார்.