தமிழ் விஜய் தொலைக்காட்சியில் ஒலிப்பரப்பாகி வெற்றிக் கரமாக ஓடிக் கொண்டிருக்கின்ற பிக்பாஸ் சீசன் 10 ல் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இருந்து வரும் நிலையில், இவர் சமீபத்தில் லீடர்ஷிப் குறித்து பேசிய கருத்துக்கள் அரசியல் ரீதியாக மாபெரும் சர்ச்சை கிளப்பியது. ஆனால் இதுகுறித்து எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் அமைதியாக இருந்தார்.
அவரின் அந்த கருத்துக்களில் தனிநபரின் பெயர் குறிப்பிட்டு குறிப்பிடவில்லை என்றாலும்,அவரது பேச்சு முதலமைச்சர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்ததாக சிலர் கருத்து தெரிவித்த நிலையில்,குறிப்பாக விஜயின் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பும் விமர்சனங்களும்,கண்டனங்களும் எழுந்தன.
இந்நிலையில், விஜய்சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள “பத்தா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் குறித்து விஜய் சேதுபதி பேசியது தற்போது கவனம் பெற்றுள்ளது.
“நான் சஞ்சய் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியிருந்தேன். அதன்பிறகு விஜய் எனக்கு போன் செய்து, ‘நண்பா ரொம்ப நன்றி… அவன் சந்தோஷமாக இருந்தான்’ என்று கூறினார். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அவரே ஒரு பெரிய சூப்பர் ஸ்டார். சஞ்சய்க்கு என்னை பிடித்திருப்பது எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது. அதை அவனிடமே கூறினேன். ‘டேய், உங்க வீட்டில் எவ்வளவு பெரிய ஆளை வைத்திருக்கிறாய்’ என்று சொல்வேன். அவன் தங்கமான பையன். அவனுடைய படமும் எங்களுடன் வெளியாகிறது. அவனை எனக்கு மிகவும் பிடிக்கும். கியூட் ஃபெல்லோ” என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள “பத்தா” திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாக உள்ளது. கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தலைமைப் பண்பு கருத்துக்கள் விஜய்யை மறைமுகமாக விமர்சித்ததாக கூறி கருத்துகளை பதிவிட்ட நிலையில், தற்போது பத்தா இசை வெளியீட்டு விழாவில் விஜய் மற்றும் ஜேசன் சஞ்சய் குறித்து விஜய் சேதுபதி பேசியிருப்பது இணையத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

