தமிழ்நாட்டில் தற்போதைய ஆட்சி நிர்வாகத் திறமையின்றி தவிப்பதாகவும், தொழில்துறை அமைச்சர் ரீல்ஸ் போட்டு முதலீடு கேட்பதாகவும் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் தற்போதைய ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள்ளேயே 15-க்கும் மேற்பட்ட பிரச்னைகள் எழுந்துள்ளன. இது இந்த அரசின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது. மின்தடை, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல், லஞ்ச ஒழிப்புத் துறையின் செயலற்ற தன்மை எனப் பல புகார்கள் எழுந்துள்ளன. டாஸ்மாக்கில் பாட்டிலுக்குப் பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவது இன்னும் தொடர்கிறது.

இவற்றையெல்லாம் விடக் கொடுமையாக, ஒரு மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் ரீல்ஸ் (Reels) போட்டு, அதன் மூலமாக முதலீடுகளை ஈர்க்க முயல்கிறார். இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இந்த நிர்வாகச் சீர்கேடுகளை அரசு உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்.
அ.தி.மு.க-விலிருந்து விலகி தவெக-வில் இணைந்து, உடனே பதவிகளை ராஜினாமா செய்துள்ள நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது. பா.ஜ.க இன்று இந்தியாவின் 21 மாநிலங்களில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. நாங்கள் மக்களைக் கவர்ந்து, மக்களால் விரும்பப்படும் கட்சியாக இருக்கிறோம். ஏதோ “பிள்ளை பிடிப்பது’ போல குறுக்கு வழியில் நாங்கள் இடங்களைப் பிடிக்கவில்லை.